Pudhukottai : புதுக்கோட்டை மாவட்டம் ஆற்றில் இறந்த மாணவியின் தந்தையின் காலில் விழுந்து ஆசிரியர் மன்னிப்பு கேட்டுள்ளார். 


மாணவிகள் உயிரிழப்பு


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த பிலிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6,7,8ஆம் வகுப்புகள் படிக்கும் மாணவிகள் 15 பேரை கால்பந்து போட்டியில் விளையாட ஆசிரியர்கள் ஜெயசகேவிய எம்ப்பாயுலு, திலகவதி ஆகியோர் காண்கானிப்பில் சென்றுள்ளனர். மாணவிகளை ஆம்னி வேனில் அழைத்துக் கொண்டு திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்துள்ளனர். 


காலை 10 மணியளவில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவிகள் தோல்வியை தழுவினர் . இதையடுத்து அவர்கள் கல்லூரியை விட்டு வெளியேறி கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை சுற்றிப் பார்க்க சென்றுள்ளனர். மாயனூர் கதவணைப் பகுதியை சுற்றிப் பார்த்த பிறகு சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் பகுதியில் காவிரி ஆற்றில் இறங்கி சென்றனர். 


ஆற்றின் நடுவே தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் மணலில் நடந்து சென்று நடு ஆற்றில் இருந்த தண்ணீரில் குளித்துள்ளனர். ஆழமான பகுதி என்பதால் குளித்துக் கொண்டிருந்த மாணவிகளில் 8ம் வகுப்பு மாணவி தமிழரசி, 7ம் வகுப்பு மாணவி சோபியா மற்றும் 6ம் வகுப்பு மாணவிகள் இனியா, லாவண்யா ஆகிய 4 பேர் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 


மாணவிகளின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் மாணவிகளை மீட்க முயற்சித்ததுடன்  தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.  அங்கு வந்த கரூர் மற்றும் முசிறி தீயணைப்பு நிலைய வீரர்கள் பரிசல் மூலமாகவும்,  தண்ணீரில் இறங்கியும் தேடினர். அப்போது ஒருவர் பின் ஒருவராக  நீரில் மூழ்கி இறந்த மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டது.


பின்னர், உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.


ஆசிரியர்கள் சஸ்பெண்ட்


இவ்விவகாரத்தில் புதுக்கோட்டை பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொட்டுமணி, இடைநிலை ஆசிரியர் செபகாயூ இப்ராஹிம், பட்டதாரி ஆசிரியர் திலகவதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தொடக்க கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 


மன்னிப்பு கோரிய ஆசிரியர்





இந்த சம்பவத்தை அடுத்து கடந்த 15ஆம் தேதி புதுக்கோட்டை பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மூடப்பட்டது. அதற்கு பிறகு இன்று தான் பள்ளி திறக்கப்பட்டது. இந்நிலையில், ஆற்றில் மூழ்கி இறந்த மாணவியின் தந்தையின் காலில் விழுந்து ஆசிரியர் மன்னிப்பு கேட்டுள்ளார். மாணவி தமிழரசியின் தந்தை ராஜ்குமார் காலில் விழுந்து உதவி தலைமை ஆசிரியர் பரிமளா மன்னிப்பு கோரியுள்ளார். 


இதனை அடுத்து, மகளின் இறப்பு சான்று கூட வழங்காமல் இருக்க நிலையில் எதற்காக பள்ளியை திறந்தீர்கள் என உயிரிழந்த தமிழரசியின் தந்தை ராஜ்குமார் ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.