ஓ.பன்னீர்செல்வம் இன்று மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், இதில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணி சார்பில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசுவும், தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக கட்சி சார்பாக ஆனந்தும் களம் காண்கின்றனர்.


மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். எந்த தெருவுக்குள் சென்றாலும் அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர். இன்னும் சில நாட்களில் பிரச்சாரம் ஓயவுள்ள நிலையில் முக்கிய அரசியல் தலைவர்கள் வருகையால் ஈரோடு கிழக்கு விழாக்கோலம் பூண்டுள்ளது.


இதில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் கூட்டணி கட்சியினரும் தென்னரசு ஆதரவு கேட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். 


ஆனால் இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்த அதிமுக நீண்ட இழுபறிக்குப் பின் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தென்னரசுவை வேட்பாளராக தேர்வு செய்தது. இதில் கட்சி முக்கியம், சின்னம் முடங்கக்கூடாது என்ற கருத்தில் உறுதியாக இருந்த ஓ. பன்னீர்செல்வம், தனது அணி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடுபவராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என அறிவித்தார். அதேசமயம் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் அணியினர் பிரச்சாரம் செய்வார்களா என்ற கேள்வி எழுந்தது. 


அதேசமயம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என ஏராளமானோர் பிரச்சார களத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வது தொடர்பாகவும்,வரும் 24 ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.