திராவிட இயக்கம் வளர்த்திட்ட மறைந்த முன்னோடிகளான முன்னாள் அமைச்சர் ப.உ.சண்முகம் மற்றும் தமிழகத்தின் முதல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் ஆகியோரது நூற்றாண்டு விழா இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பங்கேற்று மறைந்த முன்னாள் அமைச்சர் ப.உ.சண்முகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் ஆகியோரது குடும்ப உறுப்பினர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. மேலும் மறைந்த முன்னாள் அமைச்சர் ப.உ.சண்முகம் மற்றும் தமிழகத்தின் முதல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் ஆகியோரது திருஉருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்த விழாவில் சிறப்புறையாற்றிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், "திருவண்ணாமலையில் வாழ்ந்த திராவிட கட்சியின் வேர்களான முன்னாள் அமைச்சர் பா. உ. சண்முகம் முன்னாள் எம்பி தர்மலிங்கத்திற்கும் நூற்றாண்டு விழா எடுக்கிறோம் என்பது நமக்கெல்லாம் மிகப் பெருமை, இந்த விழாவுக்கு காரணமே முதல்வர் தான் நானும் முதல்வரும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக காலையில் வாக்கிங் செல்வோம். அப்போது நான் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஜூன் மாதம் நூற்றாண்டு விழா எடுத்தோம், அதே காலத்தை ஒட்டியவர்கள் தான் அன்பில் என்று நான் சொன்னவுடன் இரண்டு தலைவர்களுக்கு சிறப்பாக விழா எடுக்கச் சொன்னார். முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவர் கருணாநிதி எழுதிய "நெஞ்சுக்கு நீதி" முதல் பாகம் படித்தவர்களுக்கு தெரியும், அதில் தலைவர்கள் பற்றி குறிப்பிட்டு இருப்பார், இவர்கள் வேர்களாக இருந்ததால் தான் இன்று நாம் விழுதுகளாக இருக்கிறோம், விழா எடுப்பதில் சுயநலமும் உள்ளது.
அப்போது தான் அடுத்த தலைமுறை நம்மை மறக்காது தலைவருக்கு இலக்கணமாக இருந்தவர் பா. உ. ச தொண்டனுக்கு இலக்கணமாக இருந்தவர் தர்மலிங்கம் தலைவருக்கும் தொண்டனுக்கும் ஒரே நேரத்தில் விழா எடுக்க திமுகவால் தான் முடியும் . அண்ணா கடிதம் எழுதும் போது தம்பி என்று எழுதுவார், கருணாநிதி உடன் பிறப்பே என்று கடிதம் எழுதுவார். உடன்பிறப்பு என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது ஆகும். சமுதாயத்தை முன்னேற்ற சாமானிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உருவானதே திராவிட கட்சி. இதிலிருந்து தான் மக்கள் சமுதாய தொண்டாற்ற திமுக உருவானது. ஒரு காலத்தில் சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே டாக்டராக முடியும். இன்றைய நிலையில் திராவிட கட்சிகள் போராடி சாமானிய மக்களுக்கும் ஏழை, பணக்காரன், கிராமத்தில் பிறந்தவர், நகரத்தில் பிறந்தவர் என அனைவருமே மருத்துவம் படிக்கும் நிலை உருவாக்கியுள்ளது. ஆங்கிலம், தமிழ் தெரிந்தால் போதும். தமிழகத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு வித்திட்ட முதல் இடம் திருவண்ணாமலை தான். அதனை தொடங்கியவர் ப.உ.சண்முகம்.
திமுக என்பது பதவிக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. திமுகவின் கொள்கையில் இருந்து மாறுபட முடியாது என்பதால் தான் திமுக சனதானத்தினை எதிர்த்து வருகின்றது. ஆன்மீகம் என்பது வேறு சனாதானம் என்பது வேறு. ஆன்மீகத்தினையும், இந்துமதத்தினையும் திமுக ஆதரிக்கிறது. ஆனால் சனாதானத்தினையும், இந்துத்துவாவை எதிர்க்கிறோம். இந்துத்துவா என்பது பிறறை அழிப்பது. ஏற்ற தாழ்வுகளை உருவாக்குவது. அதே போல் சனாதானமும் உள்ளது.
சமுதாயத்தில் ஏற்றதாழ்வுகளை பார்ப்பது தான் சனாதானம். அதனால் தான் திரவிட முன்னேற்ற கழகம் என்றுமே சனாதானத்தினை ஏற்றுக்கொள்வது இல்லை. கடவுள் என்ற பெயரில் மக்களை அடிமைபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்னவர் தந்தை பெரியார். அவர் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று குரல் கொடுத்தவர். இந்த நூற்றாண்டு விழாவில் கொண்டாடப்படும் இருபெரும் தலைவர்கள் திமுகவினர்களுக்கு படமாக இல்லாமல் பாடமாக இருந்துள்ளனர்” என்று உறையாற்றினார்.
இந்த விழாவில் சலவை தொழிலாளர்களுக்கு சலவை பெட்டி, சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு புதிய ஆடைகள், பெண்களுக்கு தையல் எந்திரம் என 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நலதிட்ட உதவிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகிகள், பொது மக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.