தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி தரவேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. வேதாந்தா நிறுவனம் தனது மனுவில், "நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தீவிர பாதிப்புள்ள கோவிட் நோயாளிகளுக்கான சிகிச்சையில் ஆக்ஸிஜன் தேவை மிக முக்கியமானது. முதல் பாதிப்பு அலையை ஒப்பிடும்போது கொரோனா இரண்டாவது அலையில் மருத்துவ ஆக்ஸிஜனின் தேவை அதிகமாக உள்ளது. ஸ்டெர்லைட்டில் உள்ள இரண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 1000 டன் ஆக்ஸிஜன் தயாரிக்கமுடியும். மத்திய, மாநில அரசுகளுக்கு ஆக்சிஜனை இலவசமாக வழங்க அனுமதி வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இது தொடர்பாக, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பு தெரிவித்த நிலையில் இந்த இடைக்கால மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் நடைபெற உள்ளது. இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றுது. இதில், பொதுமக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், சமூக ஆர்வளர்கள், அரசியல் கட்சியினர், ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் என்று பலர் பங்கேற்றனர்.
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் பெரும்பாலான மக்கள் வலியுறுத்தினர். இருப்பினும் ஸ்டெர்லைட் ஆதாரவளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், ஸ்டெர்லைட் ஆலைகளை திறந்தால் அதன் மூலம் நாட்டு மக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கும், எங்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஆவேசத்துடன் பேச ஆரம்பித்தனர். இதனால் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கைகலப்பு நிலவியது. போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என பெரும்பாலான மக்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.