சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளையும் பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தனியார் நிறுவனங்களுக்கும்  நாளை முடிந்தவரை விடுமுறை அளிக்கும்படி அறிவுருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று அதாவது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்தது. இதனால் பல்கலைக்கழக தேர்வுகள் தொடங்கி டி.என்.பி.எஸ்.சி நேர்முகத் தேர்வுகள் என அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. 


கனமழையால் பேருந்து போக்குவரத்து குறைக்கப்பட்டது. புறநகர் மின்சார ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டு ஒரு மணிநேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகின்றது. விமான சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளது.  தமிழ்நாடு அரசு பொது அறிவிப்பு அறிவித்திருந்தாலும் பால், மருந்து, உணவகங்கள், விடுதிகள் என அத்தியாவசிய தேவைகளுக்குத் தேவையான அனைத்தும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இராணிப்பேட்டை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை


கனமழை காரணமாக இராணிப்பேட்டை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஏற்கனவே மழை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “


கடந்த 01-12-2023 மற்றும் 02-12-2023 அன்று அரசு உயர் அலுவலர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு நான் ஏற்கனவே அவர்களை எல்லாம் அழைத்து அறிவுரை வழங்கியிருக்கிறேன்.


அந்த அடிப்படையில், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன 4 ஆயிரத்தி 967 இதர நிவாரண மையங்களில், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண மையங்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


குறிப்பாக மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர் செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.


சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 2 கோடியே 44 லட்சம் பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை குறுஞ்செய்திகள் மூலமாக அனுப்பப்பட்டிருக்கிறது.


கடலோர மாவட்டங்களில் உள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.


புயல் மற்றும் கனமழை குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து உங்களைப் போன்ற ஊடகங்கள் மூலமாகவும், செய்திகளை வெளியிட்டு தொடர்ந்து அந்தப் பணியை ஆற்றி வருகிறோம். புயலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் விளக்கமாக தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.


திருவள்ளூர், சென்னை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகி இருக்கக்கூடிய இடங்களில் இருந்து 685 நபர்கள் 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.


மழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள்.


மாநில அவசரகால செயல்பாட்டு மையம் பெருநகர சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையம் மின்சாரத் துறை உட்பட அனைத்து கட்டுப்பாட்டு அறையுள் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன


பொதுமக்களுக்கு நான் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருப்பது:


புயலின் காரணமாக, பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.இதனால், மின் கம்பங்கள் மின் கம்பிகள் மரங்கள் விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்ற காரணமாக பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.


தேவைப்பட்டால், மாவட்ட நிர்வாகம் / மாநகராட்சியின் அறிவுரையின் பேரில் நிவாரண முகாம்களில் தங்குமாறும் நான் கேட்டுக் கொள்கிறேன். அங்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.