வழக்கம்போல ரயில் சேவை இருக்கும் என்றும் குறிப்பிட்ட வழித்தடங்களில்  மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  


மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விட்டுவிட்டு கன மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஆங்காங்கே கடுமையாகத் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த நேரத்தில் பொது மக்கள் மழையால் அவதிப்பட்டு வருகின்றனனர். இயல்பு நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த சூழலில் கள்ளக்குறிச்சி, வேலூர்,திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், வழக்கம்போல ரயில் சேவை இருக்கும் என்றும் மழை காரணமாக குறிப்பிட்ட வழித்தடங்களில்  மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  


இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:


* செயிண்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் 4 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளதால், பயணிகள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


* இதனால் சேவை முடங்கி உள்ளதாகவும் பயணிகள் ஆலந்தூரில் ரயில் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் வரும் சாலையில் தண்ணீர் வெள்ளம் போல வருவதால், ரோஹினி தியேட்டர் அருகே உள்ள நடைமேம்பாலம் வழியே வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


* அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அங்கு வருவது பயணிகளுக்கு சற்றே கடினமாக இருக்கும்.


* அரசினர் தோட்ட மெட்ரோவுக்கு வாலஜா சாலை சப்வே சாலை மூடப்பட்டுள்ளதாகவும் பயணிகள் பிற வழிகள் மூலம் அரசினர் தோட்ட மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  


* வழக்கம் போல ரயில் சேவை காலை 5 மணி முதல் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* பிற ரயில் நிலையப் பகுதிகளில் தண்ணீர் அளவு பெரிய அளவில் தேங்கவில்லை என்றும் சென்னை மெட்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.