சென்னையில் மிக்ஜாம் புயல் அதன் தீவிரத்தை காட்டி வரும் நிலையில் பசியால் வாடுபவர்களுக்கு உதவுமாறு நடிகர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


தென்மேற்கு வங்கக்கடலில்  ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜாம்” புயலாக தீவிரமடைந்து விட்டது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் கனமழை பெய்து வருகிறது. புயலானது தற்போது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 110 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.10 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயலானது வடக்கு -வடமேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திராவில் நெல்லூருக்கும், மசூலிப்பட்டணத்துக்கும் இடையே நாளை (டிசம்பர் 5) கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 


இதனால் சென்னையில் அனைத்து ஹோட்டல்களும் மூடப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாநகராட்சி ஊழியர்களும் முழு வீச்சில் செயல்பட்டு தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்படியான நிலையில் நடிகர் பார்த்திபன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 






பாதுகாப்பாக இருங்கள். சொல்லிவிடலாம் சுலபமாக…. அன்றாடம் உழைத்து உண்பவர்களுக்கு இந்த பேய் மழையும்,மிக்ஜாம் புயலும் மத்திய பிரதேச விரோதிகள்.தேசத்தின் ஒரு பகுதியில் காங்கிரஸும், மறுபகுதியில் பிஜேபியும் வெற்றி பெறலாம்,ஆனால் ஏழை மக்கள் உடலின் மத்திய பிரதேசத்தில் பசி இல்லாமல் பார்த்துக் கொள்வதே தேசிய வெற்றி! மழையை காதலி எனலாம் கவிதையும் எழுதலாம். ஆனால் இயலாதோர்க்கு இயன்றதை செய்வதே இந்நேரத்தில் சிறந்த செயல்! ‘புதிய பாதை’க்கு முன் இப்படிப்பட்ட மழை நேரத்தில் எங்கள் குடும்பத்தில் நாலு பேரும் நாலா திசைக்கும் சிதறி பதறி கிடப்போம்.


ஒரு சிங்கிள் டீயே பிரியாணி உணர்வாக/ பசிக்கு பதிலாக பதிவாகும்.சுடச்சுட ரசமும் சோறும் சொர்க்கமாகவே இருக்கும். E.17 mmda colonyயில் வானம் பார்த்த சல்லடை கூரை வீடு என்பதால், அழையா மழை என் பள்ளி சான்றிதழ்களையும் கரைத்துவிட்டுப் போகும். இப்படி வறுமையை உண்டு வளர்ந்தவன் என்பதால், புயல் செய்திகளை கேட்க முடியாமல் பசி காதை அடைக்கும் மக்களை நோக்கியே என் கவனம் மையங்கொண்டுள்ளது. அரசு செய்யும் உதவிகளை மீறி,அடுத்த அடுப்பில்,அடுத்த வீட்டில் அடுத்த தெருவில் இப்படி அடுத்தவர்களின் பிரச்சனைகளுக்கு ஒருவருக்கொருவர் உதவுவதே சிறந்த மனிதநேயம்! பாதுகாப்புடன் எதிர்கொள்வோம் மிக்ஜாமை!" என தெரிவித்துள்ளார்.