எரிவாயு சிலிண்டர் விலை அல்லது  ஒன்றிய பெட்ரோல் வரியை உயர்த்துவோரைப் புகழ்ந்து பாராட்டுவது. பால் விலை அல்லது  மாநில பெட்ரோல் வரியை குறைப்பவர்களை விமர்சிப்பது. இந்த மனிதாபிமானமற்ற நிலை ஏன் ஒரு குறிப்பிட்ட (முன்னாள் "பத்திரிகையாளர்" உட்பட) கட்சியினர்களை மட்டுமே பாதிக்கிறது என்று மாநில நிதி அமைச்சர் பி.டி.ஆர் கேள்வி எழுப்பியுள்ளார். 


சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் வரலாற்று காணாத அளவு பெட்ரோல்/டீசல் விலை உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசு அதிகரித்து ரூ. 100.75க்கு விற்பனையாகிறது. அதே போன்று டீசல் விலை 0.33 காசு அதிகரித்து ரூ.  96.26க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


 






பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை தொட்டுள்ளது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருபுறமிருக்க, பெட்ரோல் விலையின் இந்த போக்குக்கு, மாநில அரசைக் குறை கூறும் விதமாக சில கருத்துக்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டு வருகின்றனர்.


மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தனது ட்விட்டரில், மீம்  படத்தை ஒன்றை பதிவிட்டிருந்தார். பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில நிதியமைச்சர் செய்வதறியாது திகைப்பது போன்று அப்படத்தில் விளக்கப்பட்டது. 


 






முன்னதாக நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில், ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இதில், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள்  ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் மற்றும் டிசல் ஆகிய இரண்டையும் கொண்டு வர வேண்டாம் என்று வலியுறுத்தின. இதன் காரணமாக, தற்போதைக்கு ஜிஎஸ்டியில் கொண்டு வரும் எண்ணமில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 


இதுகுறித்து கருத்து தெரிவித்த மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,"மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளாத, மத்திய அரசால் விதிக்கப்படும் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் (Cess and Surcharge) விகிதம் அதிகரித்துள்ளது. இத்தகையை போக்கை மத்திய அரசு குறைத்துக் கொண்டால் தான், ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது தொடர்பான விவாதம் ஆக்கப்பூர்வமாக இருக்கும்" என்று தெரிவித்தார். 


இதற்குக் கண்டனம் தெரிவித்தா தமிழ்நாடு பாஜகத் தலைவர், " பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பாஜக அரசு தயாராக உள்ளது. பெட்ரோல், டீசலை ஏன் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரக்கூடாது என நிதியமைச்சர் சொல்கிறார் என புரியவில்லை. இதனை தமிழக அரசு விளக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.      


 






திமுக அரசு பால் விலையை 6 ரூபாய் உயர்த்தி 3 ரூபாய் குறைத்து 3 ரூபாய் லாபம் பார்த்ததாகவும், தற்போதைய அரசு பால் விலையை உயர்த்தி உள்ளதாகவும் சில தவறான செய்திகள் சமூக ஊடகங்கள் வெளியிடப்பட்டன.  ஆனால், தற்போது பால் விலையை உயர்த்தவில்லை என்று ஆவின் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். 2019ம் ஆண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்திய போது அனைத்து வகையான பால்களுக்கும் விற்பனை விலையை ரூ.6 ஆக  உயர்த்தியது. அந்த 6 ரூபாயில் 3 ரூபாய் விலையை குறைத்து அரசாணை வெளியிட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். அதேபோன்று, தமிழக மாநகர பஸ்களில், ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்தது.    






கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தி வருகிறது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 9.48-ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி, 2021 மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 32.9-ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 216 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வரி பங்கானது மற்ற மாநிலங்களைவிட குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


எனவே, அரசின் வருவாயைப் பெருக்க மாநில அரசு மேற்கொண்டு வரும் சிறு சிறு நடவடிக்கைகளை கூட சிலர் கேள்விக்குறியாக்கும் போக்கு தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அதனை, பிரதிபலிக்கும் விதமாக பிடிஆர்-ன் இன்றைய ட்வீட் அமைந்துள்ளது.