தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில் ஏப்ரல் 14-ம் தேதி மாலை தேநீர் விருந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த தேநீர் விருந்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த விருந்தை  சிபிஐ, சிபிஎம், விசிக, மனித நேய மக்கள் கட்சி  உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தனர். 


இதைத் தொடர்ந்து இன்று  திடீரென ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சகர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் சந்தித்தனர். இந்தச் சந்திபிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ்நாடு அரசும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளது எனக் கூறினார். 


இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த முடிவு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஆளுநர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த சிறப்பு விருந்தை ஆளுநர் அளிக்கிறார். அத்துடன் பாரதியாரின் திருவுருவ சிலை திறக்கப்பட உள்ளது. இது தமிழ் கலாச்சாரம் தொடர்பான விருந்து என்பதால் ஒரு தமிழ் பற்றாளர் என்ற வகையில் அவர்கள் கலந்து கொள்வது தான் நல்லது. ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக கலந்து கொள்ளும்” எனத் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ”ஆளுநர் தேநீர் விருந்தை திமுக கூட்டணியர் புறக்கணிப்பதால் டீ செலவு மிச்சம்” என தெரிவித்திருந்தார். அவருக்கு பதிலடி தரும் வகையில் பேசிய எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ், “டீ செலவு மிச்சமா? டீசல் செலவு மிச்சமா? தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சனைக்கான புறக்கணிப்பை தேநீர் செலவு மிச்சம் என மலினப்படுத்தக்கூடாது. 


இந்த கருத்துகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கருத்தை பதிவு செய்திருக்கிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அந்த பதிவில், “இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள், ஆளூர் ஷாநவாஸ் சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்” என குறிப்பிட்டிருக்கிறார். 








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண