தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்றை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 


சர்ச்சைகளை கிளப்பும் ஆடியோ 


சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டெல்லி செய்தியாளர்களிடம் பேசியதாக கூறி ஆடியோ ஒன்று  வெளியானது. அதில், “ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும்,  முதலமைச்சரின் மருமகனான சபரீசனும் சேர்ந்து 30 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாகவும், இருவரும் எப்படி இவ்வளவு பெரிய தொகையை கையாளப் போகிறார்கள்” என்ற உரையாடல்கள் இடம் பெற்றிருந்தது. 


இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், “ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் இல்லை. இது ஒரு மோசடி. இப்படியான ஆடியோவை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  சமூக வலைத்தளத்தில் தெரிவித்ததோடு, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அந்த அறிக்கையில், “சமூக வலைத்தளங்களில் மண் வாரித் தூற்றப்படும் விஷயங்களுக்கு பதிலளிக்க நேரமிருப்பதில்லை.என்னைப் பற்றி கடந்த 2 வருடங்களில் ஏராளமான அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளது. என்னை வில்லனாக காட்ட  முதலில் முயற்சி செய்தார்கள். என்னையும்  முதலமைச்சரையும் பிரிக்க நினைக்கும் யுக்தி வெற்றியடையாது” என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இதனுடன் 2 விஷயங்களை அவர் குறிப்பிட்டிருந்தார். அதாவது  “போலியான ஆடியோக்களைத் தயாரிக்கும் திறனுடன், மேலும் மோசமான ஆடியோ வீடியோ கிளிப்புகள் வெளிவரலாம். பொறுப்பான அரசியல்வாதிகளும், பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும் சரியான தரவுகளுடன் அவற்றை பிரசுரிக்கவும், வெளியிட்டுப் பேசவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனவும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி  பாஜக தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் உள்ளிட்ட குழுவினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். 


இந்நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்றை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், “நான் அரசியலுக்கு வந்த நாள் முதல் “ஒரு நபர் ஒரு பதவி” என்ற கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான். முதல்வரின் மகனும், மருமகனும் தான் கட்சியே” என்கிற ரீதியிலான பேச்சு இடம் பெற்றுள்ளது. இது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.