தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா அண்மையில் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசால் நிறைவேற்றப்பட்டது. கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையெல்லாம் மீறி 65ஏ சட்டத்திருத்தத்தை முன்னதாக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது.


இதற்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் தொடங்கி அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் குவிந்தன. இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள் உடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.


ஆனால் தொடர்ந்து இந்த சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நேற்று (ஏப்.24) தொழிலாளர்களின் வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட முன்முடிவு மீதான மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.


இந்நிலையில் திமுக அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முன்னதாக ட்வீட் செய்துள்ளார்.


அதில், “தொழிற்சாலைகளில் 12 மணி நேரம் வேலை என்கிற சட்ட முன்வடிவின் மீதான மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது எனும் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன். 


யார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுத் தரப்பின் நியாயமான கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்படுவது ஓர் ஆரோக்கியமான அரசின் அடையாளங்கள்.


ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறேன். 12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என ட்வீட் செய்துள்ளார்.


 






 






முன்னதாக சட்ட முன்முடிவு நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “திமுக அரசு எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தொழிலாளர் நலன் பேணும் அரசாகவே செயல்பட்டு வந்துள்ளது. தற்போது அதே சிந்தனையைத் தாங்கி கலைஞர் வகுத்துத் தந்த பாதையில் அதன் அடியொற்றி இந்த அரசு செயல்பட்டு வருகிறது.


இந்த அரசு ஒரு சட்டமுன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகிறதோ அது குறித்து மக்களிடம் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் வரப்பெற்றால் அவற்றை ஆராய்ந்து அவர்களின் கருத்துக்களுக்கு இணங்க மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வதிலும் அதே அளவு உறுதி காணப்பட வேண்டும். அந்த வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.