தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இது தொடர்பாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.  இந்நிலையில் இந்த சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீண்ட நாட்களாக தேர்தல் நடத்தப்படவில்லை.


இதன்காரணமாக அங்கு வளர்ச்சி பணிகள் தேக்க நிலையில் இருந்தன. மேலும் உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் பற்றாகுறையில் இருக்கும் போது அதை சமாளிக்க வரி உயர்வு மிகவும் அவசியமான ஒன்றாக அமைந்தது. தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்துள்ளனர். அவர்கள் வந்தவுடன் அவர்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நிதி ஆதாரத்தை அரசிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள். 


ஆகவே வேறு வழியின்றி இந்த சொத்து வரி உயர்வை செய்திருக்கிறோம். அதில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது அதற்காக தான் கட்டடங்களின் அளவிற்கு ஏற்ப சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் நகர்ப்புறத்திலுள்ள மொத்த குடியிருப்புகளில் 83% மக்களை இந்த வரி விதிப்பு பாதிக்காது. இந்த வரி உயர்வை பத்திரிகைகள் கூட வரவேற்றுள்ளன. மாநிலத்தின் வளர்ச்சிக்கு இந்த வரி உயர்வு முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. 


எனவே இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகள் ஆகிய அனைவரும் இந்த வரி விதிப்பில் அரசியல் செய்யாமல் ஒட்டு மொத்த மாநில வளர்ச்சி உறுதுணையாக இருக்க வேண்டும் என வேண்டி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.  


முன்னதாக விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது, ”வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 10 மாதங்களில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் 68.375 கோடி ரூபாயில் 2.05 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் போடப்பட்டுள்ளது.


துபாய் பயணத்தில் 12,500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.6,100 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. டி.பி வேர்ல்டு, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. துபாயில் எரிசக்தி, சரக்கு போக்குவரத்து திட்டங்கள், மின்னணுவியல் திட்டங்களில் அதிக அளவிலான முதலீட்டை ஈர்க்க உரையாடினேன். விரைவில் இந்த முதலீடு தொடர்பாக பணிக்குழு அமைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண