பால் விலை 3 மாதங்களில் 2ஆவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்தும் கடமை தமிழக அரசுக்கு இல்லையா எனவும் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுகுறித்துப் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:


’’தமிழ்நாட்டில் தனியார் பால் விலை மீண்டும் லிட்டருக்கு ரூ.2 வீதமும், தயிர் விலை ரூ.8 வீதமும் உயர்த்தப்பட்டிருக்கின்றன.  கடந்த 15 மாதங்களில் இது ஆறாவது விலை உயர்வு. கடந்த 3 மாதங்களில் இது இரண்டாவது உயர்வு. ஏழைகளை கசக்கிப் பிழியும் இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கது!


இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள விலை உயர்வின் மூலம் ஆவின் பாலை விட, தனியார் நீல உறை பால் விலை லிட்டருக்கு ரூ.14 (ஆவின் விலை ரூ.40/ தனியார் விலை ரூ.54), பச்சை உறை பால் ரூ.22 (ரூ. 44/ ரூ.66), ஆரஞ்சு உரை பால் ரூ.14 ( ரூ.60/ ரூ.74) அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது!


கடந்த ஆண்டில் தனியார் பால் விலை சராசரியாக 70 நாட்களுக்கு ஒரு முறை உயர்த்தப்பட்டது. கடைசியாக கடந்த ஜனவரி 20-ஆம் நாள் உயர்த்தப்பட்ட தனியார் பால் விலை அடுத்த 74 நாட்களில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருளான பாலின் அடிக்கடி உயர்த்தப்படுவது நியாயமல்ல.






வெளிச் சந்தையில் தனியார் பால் விலையை  ஒழுங்கு முறைகளின் மூலமாகவும், ஆவின் பால் வழங்கலை அதிகரிப்பதன் மூலமும் கட்டுப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உண்டு. ஆனால், யாருடைய நலனைக் காக்கவோ, இந்தக் கடமையை தமிழக அரசு தட்டிக் கழிக்கிறது.


தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவும் ஆவின் பால் தட்டுப்பாடு, தனியார் பால்விலை உயர்வுக்கு கூடுதல் காரணமாகி இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக இந்த சிக்கலில் தலையிட்டு தனியார் பால் விலையைக் கட்டுப்படுத்தவும், ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.


இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


 


இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


இதையும் வாசிக்கலாம்: பால் கொள்முதல் விலை கிடைக்கும் வரை போராட்டம்.. துணைத் தலைவர் பெரியண்ணன் பேட்டி! https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-milk-producers-welfare-association-vice-president-said-protest-will-be-intensified-until-the-purchase-price-of-milk-is-found-107371/amp