சென்னை மடிப்பாக்கம் அடுத்த மூவரசம்பட்டு தர்மலிங்கேஸ்வரர் கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்வின் போது குளத்தில் கோயில் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் சுமார் 25 பேர் இறங்கி மூழ்கி குளித்தனர். இவர்கள் அனைவரும் அர்ச்சகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிகழ்வின் போது மூவர் குளத்தில் இறங்கி தீர்த்தவாரிக்காக மூழ்கிய போது நீச்சல் தெரியாததால் குளத்தில் மூழ்கி தத்தளித்தனர். இவர்களை காப்பாற்ற முயன்ற போது இருவர் நீரில் மூழ்கினர். பின்னர் அனைவரும் பொதுமக்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர். 


குளத்தில் மூழ்கிய 5 பேரை வேளச்சேரி மற்றும் கிண்டி இரு இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் 5 பேரில் உடல்களையும் மீட்டு மருத்துவமனை அழைத்து சென்றனர். அனைவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 


பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, தெற்கு இணை ஆணையர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 


முதற்கட்ட விசாரணையில் ராகவன், லோகேஷ்வரன், வனேஷ், சூரியா, ராகவன் உள்ளிட்ட 5 பேர் என்பதும், 25 வயதிற்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இருவர் கல்லூரி படிப்பதாகவும், மற்றவர்கள் வேலை பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. அனைவரின் உடலும் குரோம்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 


பழவந்தாங்கல் போலீசார் தரப்பில் தீர்த்தவாரி குளத்தில் இறங்கும் நிகழ்வு குறித்து அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. 


இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆணையர் சங்கர் ஜிவால் உடலை மீட்டுள்ளோம். விசாரணை நடைபெறும் எனவும், மீண்டும் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகிகளிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 


நிவாரணம் அறிவிப்பு:


மூவரசம்பட்டு கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம அறிவிக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயில் தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக இன்று காலை 9.30 மணியளவில், கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி, திரு. சூர்யா (வயது-22), திரு. பானேஷ் (வயது-22), திரு.ராகவன் (வயது-22) திரு. யோகேஸ்வரன் (வயது-21) மற்றும் திரு. ராகவன் (வயது-18) ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.


இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.