பொதுமக்களின் தவிர்க்க முடியாத அத்தியாவசிய பொருட்களில் ஒன்று பால். ஆவின் மற்றும் தனியார் பால் பாக்கெட்டுகளை நம்பி தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். இந்த நிலையில், தனியார் பால் நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பால் விலையை உயர்த்தியுள்ளது.
தனியார் பால் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இந்த வார இறுதியில் நடைமுறைக்கு வர உள்ளது. இதன்படி, 3 சதவீத கொழுப்புச் சத்துள்ள பாலின் விலை லிட்டருக்கு ரூபாய் 48-ல் இருந்து ரூபாய் 50 ஆக உயர உள்ளது. 6 சதவீத கொழுப்புச் சத்துக்கொண்ட நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூபாய் 72 ஆக உயர உள்ளது.
தனியார் பால் விலை உயர்த்தப்பட்டால் கடுமையான பாதிப்பு ஏற்படுவதுடன் டீ விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். தனியார் பால் நிறுவனங்களின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆவின் நிறுவனத்தில் 3 சதவீதம் கொழுப்புச் சத்துள்ள பால் லிட்டருக்கு ரூபாய் 40-க்கு விற்கப்படுகிறது. ஆனால், தனியார் பால் விலை அதைவிட 25 சதவீதம் அதிகமாக உள்ளது. ஆவினில் 6 சதவீத கொழுப்புச் சத்து கொண்ட ஆவின் பால் லிட்டருக்கு ரூபாய் 48க்கு மட்டுமே விற்கப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் 50 சதவீத அளவிற்கு விலையை உயர்த்தி விற்பனை செய்கின்றன. அதாவது, ரூபாய் 72க்கு விற்கப்படுகிறது. ஒரே ஆண்டில் மட்டும் பால் விலை உயர்த்தப்படுவது இது நான்காவது முறை ஆகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பால் விலை உயர்த்தப்படுவது ஆறாவது முறையாகும்.
இந்த பால் விலை உயர்வுக்கு தனியார் நிறுவனங்கள் பாலை அடைத்து விற்கும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பே காரணம் என்று விளக்கம் அளித்துள்ளது. தனியார் பால் நிறுவனங்கள் அளித்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை என்றும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தனியார் பால் நிறுவனங்களின் விலை நிர்ணயத்தை தமிழக அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க : Tamil Nadu Assembly : தி.மு.க. ஆட்சியில் 78 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றம் - சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மேலும் படிக்க : vaiko: ”தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றவேண்டும்” - வைகோ