சட்டப்பேரவையின் செயல்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
”சட்டப்பேரவை ஆளுங்கட்சி உறுப்பினர்களை விடவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
அருணா ஜெகதீசன் அறிக்கையை எதிர்கொள்ள முடியாமல் பயந்து அதிமுகவினர் பேரவையில் கலவரம் செய்ய முயன்றனர். முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கேள்வி நேரம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நேரலையில் கொடுக்கப்படுகிறது.
சட்டபேரவையை ஜனநாயக முறையில் சபாநாயகர் வழிநடத்திக் கொண்டு இருக்கிறார். பேரவைத் தலைவரை குறைகூறுவது என்பது அதிசயமாக இருக்கிறது. தன் அருகே ஓ.பன்னீர் செல்வம் அமர்வதை எடப்பாடி பழனிசாமியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பேரவைத் தலைவர் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து அதிமுகவினர் கூச்சலிட்டனர். துப்பாக்கிச்சூட்டை தொலைக்காட்சியில் பார்த்தே தெரிந்துகொண்டதாக பழனிசாமி பொய் கூறியது அம்பலமாகியுள்ளது. உளவுத்துறை தகவல் அளித்தும் எடப்பாடி பழனிசாமி அலட்சியமாக இருந்துள்ளார்.
சட்டப்பேரவையின் செயல்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடியாமல் சட்டப்பேரவையில் அதிமுக கலவரம் செய்ய முயன்றனர் என்று விமர்சித்துள்ளார்.
உளவுத்துறை தகவல் அளித்தும் இபிஎஸ் அலட்சியமாக இருந்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வுகள் நிமிட வாரியாக எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியுள்ளது. யாராக இருந்தாலும் குற்றச்சாட்டுடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனக்கு இருக்கும் நெருக்கடியை மறைக்க இபிஎஸ் முயல்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையின் மூன்றாவது மற்றும் இறுதி நாள் கூட்டம் இன்று நிறைவுற்றது. இன்று ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து விதி எண் 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘’கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக் கல்வித் துறையானது மகத்தான பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் வண்ணம், காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், மாதிரிப் பள்ளிகள், நான் முதல்வன், தகைசால் பள்ளிகள் என அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றது.
இந்தச் சூழ்நிலையில், பள்ளிக் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கென அரசுப் பள்ளிகளுக்கு சுமார் 26 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், 7 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சுற்றுச்சுவரும், பராமரிப்புப் பணிகளுக்கென சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியும் என மொத்தம் சுமார் 12 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி தேவை என்று கண்டறியப்பட்டு, அவற்றைப் படிப்படியாக ஏற்படுத்தித் தருவதற்கென 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்' என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அத்திட்டத்தின்படி, நடப்பாண்டில் சுமார் ஆயிரத்து 430 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. தரமான கல்வியை அரசுப் பள்ளிகள் வழங்கி வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 15 இலட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளார்கள்.
எனவே, அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப புதிய வகுப்பறைகளுக்கான தேவைகளும் உயர்ந்துள்ளதால், கூடுதலான வகுப்பறைகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1200 வகுப்பறைகளும் என மொத்தம் ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 200 வகுப்பறைகள் நடப்பாண்டிலேயே கூடுதலாகக் கட்டப்படும்.
பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்கென நடப்பாண்டில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 50 கோடி ரூபாய் நிதியுடன் சேர்த்து, தற்போது 115 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசுப் பள்ளிகளை உரிய முறையில் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசுப் பள்ளிகளை நாடி வரும் மாணவர்களுக்கு தரமான பள்ளிக் கட்டமைப்பு கிடைக்கப் பெறுவதுடன், பாதுகாப்பான கற்றல் சூழலும் உறுதி செய்யப்படும்’’ எனப் பேசினார்.