தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், கடலூர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இன்றும் நாளையும், தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும், தென் தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும்,  வட தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி, அடுத்த ஐந்து தினங்களில்  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அதிகபட்ச  வெப்பநிலையில்  பெரிய  மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு எனவும், அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°–40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில்   33°–37° செல்சியஸ் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


சென்னையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.



தமிழ்நாட்டில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு டெல்டா  மாவட்டங்கள், தென் தமிழகம், மேற்கு தமிழ்நாடு, உள் தமிழகம் ஆகிய பகுதிகளில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் மழைக்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும் வெப்பநிலை சற்று தணிந்து காணப்படும். தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, கொடைக்கானல், வால்பாறை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு நல்ல மழை இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.