Madurai Chithirai Festival: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் அங்கமாக, ஏப்ரல் 21ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
மதுரை சித்திரை திருவிழா ந்று தொடக்கம்:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கள்ளழகர் ஆற்றில் இறங்குவது, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் போன்ற நிகழ்வுகளை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அண்டை மாவட்டங்களில் இருந்தும் குவிவார்கள். இதனால் தூங்காநகரம் என்பன போன்ற பல பட்டப்பெயர்களை கொண்ட மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். அந்த வகையில் நடப்பாண்டிற்கான மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
சித்திரை திருவிழா நிகழ்ச்சி நிரல்:
- இன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சித்திரை திருவிழா தொடங்கியது
- இதனை தொடர்ந்து தினந்தோறும் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் வலம் வருவர்.
- ஏப்ரல் 19ம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்
- ஏப்ரல் 20ம் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 21ம் தேதி நடைபெற உள்ளது.அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும்.
- அதேநாள் இரவு மீனாட்சியம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.
- ஏப்ரல் 22ம் தேதி மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் தேரோட்டம் நடைபெறும்.
- ஏப்ரல் 23ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.
- இதனிடையே அழகர் கோயில் திருவிழா வரும் 19ம் தேதி தொடங்குகிறது.
- ஏப்ரல் 21ம் தேதி மாலை 6.10 மணிக்கு மேல் 6.25 மணிக்குள் தங்க பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார்.
- ஏப்ரல் 22ம் தேதி அவருக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறும்
- ஏப்ரல் 23ம் தேதி அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10க்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறும்
- ஏப்ரல் 24ம் தேதி தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும்
- ஏப்ரல் 25ம் தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் அழகர் காட்சியளித்து திருவிளையாடல் நடைபெறும்.
- அன்று பிற்பகல் ராஜாங்க அலங்காரத்தில் அழகர், அனந்தராயர் பல்லக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுதல் நடக்கிறது. அதோடு, அன்று இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு நடைபெறுகிறது.
- ஏப்ரல் 26ம் தேதி அழகர் மலைக்கு புறப்பட, . அன்று இரவு அப்பன் திருப்பதியில் விடிய விடிய திருவிழா நடைபெறும்.
- ஏப்ரல் 27ம் தேதி காலை 10.32 மணிக்கு மேல் 11 மணிக்குள் அழகர் இருப்பிடம் வந்து சேருவார்.