நாடாளுமன்ற தேர்தல் திருவிழா 2024


நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு, அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் தங்களது பகுதிகளில் வாக்குகளை சேகரிக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அதிலும் சுயேட்சையாக களம் இறங்கும் நபர்கள் தங்களது பரப்புரைகளை மேற்கொள்ள ஒவ்வொரு இடங்களிலும் வித்தியாசத்தை காண்பித்து வருகின்றனர்.

 



திருவள்ளுவர் சிலை நெற்றியில், திருநீறு வைத்த பாஜக வேட்பாளர் 


திருவண்ணாமலை நாடாளுமன்ற  தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்  வாக்கு கேட்டு திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தண்டராம்பட்டு ,தானிப்படி,சிறுப்பக்கம் ,ராதாவராம் உள்ளிட பகுதிகளில் பாஜக வேட்பாளர் தீவர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது சாத்தனுர் கிராமத்தில்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, சாத்தனுர் பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட சென்றார்.

 

கட்சி நிர்வாகிகளிடம் திருநீறு மற்றும் குங்குமம் எடுத்துவரக் கூறி திருவள்ளுவரின் நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமத்தை வைத்தபின்பு பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

 

ஏற்கெனவே திருவள்ளுவர் தினத்துக்கு சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திருவள்ளுவர் காவி உடையில், திருநீறு அணிந்து இருப்பது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டு, “திருவள்ளுவர் தினத்தில், தமிழ்நாட்டில் பிறந்த புலவரும், தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாச துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்” என பதிவிட்டது சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது