கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.வி.எஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட அந்தக் கல்லூரியின் தாளாளர் வாசுகி நேற்று பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.


கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் என்னும் இடத்தில் எஸ்விஎஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவிகள் மூன்று பேர் அந்தக் கல்லூரியின் அருகே இருந்த கிணற்றில் கடந்த 2016ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இறந்த மாணவிகள் மூன்று பேரின் பெயரும் சரண்யா, பிரியங்கா மற்றும் மோனிஷா எனத் தெரியவந்தது. மேலும், 
மாணவிகள் மர்ம மரணத்தை அடுத்து அந்தக் கல்லூரி குறித்து மேலதிகமாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. 


இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட தாளாளர் வாசுகி தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்பு தன்னை அந்தக் கட்சியில் இணைத்துக்கொண்டார். 


வாசுகி கட்சியில் இணைந்தது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


சவுக்கு சங்கர் இதுதொடர்பாக கட்சித் தலைவர் அண்ணாமலையைத் தனது பதிவில் சாடியுள்ளார். அதில், ‘’இப்போ கொலை கேஸு அக்யூஸ்ட் கட்சியில் இணைந்து மோட்சம் பெற்றார்.






கள்ளக்குறிச்சி அருகே 3 கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எஸ்.வி.எஸ் கல்லூரி தாளாளர் வாசுகி "பாஜக"வில் இணைந்தார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.


 


இதுதவிர மேலும் சிலரும் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தக் கல்லூரியின் தாளாளரை அதிமுக கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா  இணைத்துக் கொண்டது கண்டிக்கத் தக்கது எனக் கண்டனப்பதிவு செய்து வருகின்றனர்.