தந்தையின் இறுதி சடங்கிற்கு எப்படியாவது சென்று சேர வேண்டும் என்பதற்காக ஓடோடி வந்த மகனின் பாசத்தை ஊர்மக்கள் அனைவரும் கண்டு நெகிழ்ந்து போன சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. நெகிழும்படியாக என்ன நிகழ்ந்தது என்றால், இந்தோனேசியாவில் இருந்து விமானத்தில் பெங்களூரு வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து வந்து நேரத்திற்கு சேர்ந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கே.ஆர்.சுப்பையா. இவரது ஒரே மகன் சசிகுமார். இவர் திருப்பூரில் ரெடிமேடு ஆடைகள் கம்பெனி நடத்தி வருகிறார். இதைத்தவிர இவருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தோனேசியாவில் நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் சசிகுமார் தொழில் விஷயமாக இந்தோனேசியா சென்றிருந்தார். அப்போது சசிகுமாருக்கு, அவரது தந்தை உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது.



தந்தை இறந்த செய்தி கேட்டு உருகிய மகன் சசிகுமார் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக உடனடியாக இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து பெங்களூரு வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக வர தாமதம் ஆகும் என்பதால், 5 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து ஹெலிகாப்டர் ஒன்று வாடகைக்கு எடுத்துள்ளார். தனியார் ஹெலிகாப்டர் வாயிலாக, நேற்று மாலை புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் வந்தார். முன்னதாக, புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் ஹெலிகாப்டா் தரையிறங்க அனுமதி பெறப்பட்டிருந்தது. பின்னா், அங்கிருந்து காரில், சொந்த ஊரான தென்னங்குடிக்கு சென்றார். தந்தையின் இருதிச்சடங்கில் கலந்து கொள்ள எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று எப்படியோ வந்து சேர்ந்த சசிகுமாரை கண்டு அங்கிருந்த மக்கள் நெகிழ்ந்தனர்.



பெங்களூரில் இருந்து புதுக்கோட்டை வந்த தனியார் ஹெலிகாப்டர் உடனடியாக திருப்பி அனுப்புவதாக தான் முதலில் திட்டம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தேனியில் இருந்து 'ஒயிட் பெட்ரோல்' கொண்டு வந்து நிரப்ப காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக ஒயிட் பெட்ரோல் வந்ததும் ஹெலிகாப்டர் புறப்பட தயாரான நிலையில், வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரமாக இருக்கும் காரணத்தால் வானம் திடீரென மேக மூட்டம் கொண்டது. அந்த வானிலையில் ஹெலிகாப்டர் இயக்க முடியாது என்று பைலட் கூறியுள்ளார். இதனால், ஹெலிகாப்டர் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பைலட்டும், அவரது உதவியாளரும் புதுக்கோட்டை ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக தடைபட்ட ஹெலிகாப்டர் திரும்பி செல்லும் பயணம் இன்று புறப்பட திட்டமிட பட்டுள்ளது. எனவே நேற்று முதல் ஹெலிகாப்டர் ஆயுதப்படை திடலில் நிறுத்தப்பட்டிருக்கிறது. நிறுத்தப்பட்டிருக்கும் ஹெலிகாப்டரை பொதுமக்கள் பலரும் ஆா்வமுடன் வந்து பாா்த்துச் செல்கின்றனர். ஹெலிகாப்டரின் பாதுகாப்புக்காக போலீஸாரும் பணியில் அமா்த்தப்பட்டிருந்தனா். ஹெலிகாப்டரைச் சுற்றிலும் தடுப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.