தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரையும் நடைபெற்ற வருகிறது. குறிப்பாக, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து விட வேண்டும், கர்நாடகாவிடம் கூறிய தண்ணீரை பெற்றுக் கொடுத்திட வேண்டும், மேகதாது அணை கட்டுமானத்தை சட்டப்படி நடத்தி நிறுத்த வேண்டும், ராசி மணல் அணை கட்டுமான பணியை துவங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதி கேட்டு பேரணி கடந்த 10 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கியது.


இந்த பேரணியானது காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கல்லணை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஒகேனக்கல், மேட்டூர் அணையில் நிறைவடைய உள்ளது.



இதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகர் திருவாகவுண்டனூர் பகுதியில் விவசாயிகள் பேரணி வருகை புரிந்தனர். அப்போது சேலம் மாவட்ட விவசாயிகள் சார்பில் பி.ஆர்.பாண்டியனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் திருவாகவுண்டனூரில் இருந்து தொடங்கிய பேரணி ஏ.வி.ஆர் ரவுண்டானா அருகில் முடிவடைந்தது. 


முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நீர் ஆதாரங்களை தடுக்கும் விதமாக தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. அவ்வாறு கட்டினால் தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இது குறித்து தமிழக முதல்வர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பிரதமர் மோடி, மாநிலங்களுடையே பேசி நீராதார பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் மோடி அதை வைத்து அரசியல் செய்து வருகிறார். தற்போது கூட கர்நாடகத்தைச் சேர்ந்தவருக்கு ஜல் சக்தி துறை அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.



மேலும், மோடி விவசாயிகளை புறக்கணித்தும், அவமதித்தும் செயல்பட்டதால் தமிழ்நாடு, உத்திரபிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.


மேலும் ஆட்சி அமைக்கும் தகுதியை மோடிக்கு அவர்கள் வழங்கவில்லை. மூன்று ஆண்டுகளாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்தது மோடி போலவே தமிழக முதல்வரும் செயல்பட்டு வருகிறார். இதே நிலை நீடித்தால் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு ஏற்பட்ட நிலைமை தான் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வருக்கும் ஏற்படும். 


தொடர்ந்து சேலத்தில் இருந்து புறப்பட்ட பேரணி காலை 9 மணி அளவில் ஒகேனக்கல் மற்றும் மாலை 3 மணிக்கு மேட்டூர் பகுதியில் பேரணி நிறைவு பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது.