மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை முடித்த பின் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு வந்தடைந்தார். பின் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு பயணம் மேற்கொண்டார். மாலை 5 மணியளவில் குமரியில் இருக்கும் பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார். நேற்று அதிகாலை 5.30 மணி வரை சுமார் 11 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்ட பின், தியான மண்டபத்தில் இருந்து வெளியே வந்து சூரிய உதயத்தை கண்டு வழிபாடு செய்தார்.
பின் ஸ்ரீபாதம் மண்டபத்தில் சற்று நேரம் தியான் செய்து காலை 7 மணியளவில் மீண்டும் தியான மண்டபத்திற்கு சென்று 2வது நாளாக தியானத்தை தொடங்கினார், இன்று மதியம் 3 மணி வரை தியானத்தை தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 45 மணி நேரம் தியானம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் தியானத்தை முடிக்கிறார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் தியானத்தை மேற்கொள்வது வழக்கமாக வைத்துள்ளார். 2014 தேர்தல் முடிவுகளுக்கு முன், பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜி மகாராஜாவை வணங்கினார். அதேபோல், 2019 மக்களவை தேர்தலுக்கு முன், பிரதமர் மோடி கேதார்நாத் குகையில் அமர்ந்து தியானம் செய்தார். இப்போது 2025 மக்களவை தேர்தலுக்கு முன், பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டுள்ளார்.