கூடுவாஞ்சேரி அருகே 2-மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.

 

 

 மின்வெட்டு பொதுமக்கள் போராட்டம்


 

சென்னை புறநகர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அவ்வப்பொழுது மின் வெட்டு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் உள்ளது .‌ குறிப்பாக லோ- வோல்டேஜ் காரணமாக இது போன்ற மின் வெட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.‌ இந்த நிலையில் நேற்று நள்ளிரவு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே 2-மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டு நல்லூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 

 

 

 மின்சார ஊழியர்களிடம் வாக்குவாதம்


 

இந்நிலையில் நேற்றிரவு 9-மணி முதல் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முன்னறிவிப்பு இன்றியும், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டாலும் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதி அடைவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் மற்றும் மின்சார ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், விரைவில் மின்சாரம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என உத்தரவாதம் அளித்தனர்.

 

காவல்துறையினர் மற்றும் மின்சார ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து சீர் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

 

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததாவது :  அவ்வப்பொழுது இரவு நேரங்களில் மின்சாரம் தடை ஏற்படுகிறது. கோடை காலம் என்பதால்,  குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் மின்சாரம் இல்லாமல் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.  இதன் காரணமாக பல்வேறு உடல் உபாதிகள் ஏற்படுகின்றன. இது மட்டும் இல்லாமல்  இரவில் தூங்க முடியாததால்,  மறுநாள் காலை வேலைக்கு   செல்வதும் பாதிப்பு ஏற்படுகிறது.  எனவே மின்சாரத் துறை மற்றும் அரசு  இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்