சென்னையில் 2 வயது பெண் குழந்தையின் முகத்தை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அந்த குழந்தைக்கு ரூ. 60 ஆயிரம் செலவில் முகத்தில் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில் இதுவரை எந்தவொரு அதிகாரிகளும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
என்ன நடந்தது..?
சென்னையை அடுத்த அம்பத்தூர் மண்டலம் 7 க்கு உட்பட்ட பாடி வட்ட வடிவ நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் தங்கபாண்டியன்- பிரதீபா தம்பதி. இவர்களுக்கு யாஸ்மிகா என்ற 2 வயது குழந்தை ஒன்று உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தங்கபாண்டியன் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், தங்கபாண்டியன் - பிரதீபா தம்பதியின் 2 வயது குழந்தை யாஸ்மிகா கடந்த திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு வீட்டில் மின்சாரம் இல்லாததால் வீட்டின் தரைதலை பகுதியில் விளையாடி கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த இரண்டு நாய்கள் குழந்தையை துரத்திய அதில் ஒரு நாய் கன்னத்தில் ஏடாகூடமாக கடித்ததாக கூறப்படுகிறது. குழந்தை யாஸ்மிகாவின் கன்னத்தில் சதை பிளந்து வெளியே வரும் அளவிற்கு கடித்ததில் ரத்தம் சொட்ட சொட்ட அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் 60 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்து உள்ளதாகவும், இதுவரை இது தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாடி வட்ட வடிவ நகர் மற்றும் ஜீவன் பீமா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான தெருநாய்கள் சுற்றி வருவதாகவும் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். தற்பொழுது குழந்தை யாஸ்மிகா சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இதுபோல் வேறு எந்தவொரு குழந்தைக்கும் நடந்துவிடக்கூடாது என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.