பிரதமர் மோடி, வரும் அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாடு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தை திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது.
புதிய பாம்பன் பாலம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் மற்றும் ராமேசுவரத்தை இணைக்கும் வகையிலான புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ராமேஸ்வரம் தீவானது, இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாத ஸ்தலமாகவும், ஆன்மீக அடையாளமாகவும் இருக்கிறது. அங்கு அதிகரித்து வரும் பயண தேவைகளை கருத்தில் கொண்டு பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்தது. இந்நிலையில், கடந்த சில சோதனை ஓட்டமானது நடைபெற்று வருகிறது.
பழைய பாம்பன் பாலம்
ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய பாம்பன் ரயில் பாலம் 110 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வந்தது. குறிப்பிட்ட கால இடைவெளியில் வர்ண பூச்சு செய்தும் கடல் உப்பு காற்று காரணமாக கப்பல்களுக்கு வழி விடுவதற்காக திறக்கப்படும் பாலத்தின் கிர்டர் பகுதிகள் துருப்பிடிக்க ஆரம்பித்தது. சில இடங்களில் துரு காரணமாக இரும்பு பட்டைகளின் கனம் குறைய ஆரம்பித்தது. பாலத்தின் அபாய நிலை காரணமாக ரயில்கள் 2 கிலோ மீட்டர் பாலப்பகுதியில் 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டன. பராமரிப்பிற்காக ரயில் போக்குவரத்தை அடிக்கடி நிறுத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது. தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த பாலத்தை தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என கருத்து தெரிவித்திருந்தனர்.
எனவே நவீன வசதிகளுடன், புதிய பாலம் கட்ட ரயில்வே வாரியம் முடிவு செய்தது. புதிய பாலம் கடலில் 2.8 கி. மீ. நீளத்திற்கு நடுவில் பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் கட்டப்பட்டது. நடுவில் உள்ள 72.5 மீட்டர் லிஃப்டிங் கிர்டர் செங்குத்தாக மின் இயந்திரவியல் சக்தி மூலம் திறந்து கப்பல்களுக்கு வழிவிடும்.
பிரதமர் மோடி:
இந்நிலையில், புதிய பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து, ரயில் சோதனை ஓட்டங்களும் வெற்றிகரமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த புதிய பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 2 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அப்போது ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்றும் வழிபாடு நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் விமானப்படை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.