காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மிக முக்கிய அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள் நோயாளிகளாகவும், புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மட்டும் இல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகளும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.
மகப்பேறு நலப்பிரிவு
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஐந்து அடுக்கு மாடிகள் கொண்ட மகப்பேறு நல மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ பிரிவின் முதல் தளத்தில் கர்ப்பிணி பெண்கள் பகுதி, இரண்டாவது தளத்தில் பெண்கள் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து பகுதி, மூன்றாவது தளத்தில் கர்ப்பிணி பெண்கள் (குடும்ப கட்டுப்பாடு) அறுவை சிகிச்சை பகுதி, நான்காவது தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பகுதி, ஐந்தாவது தளத்தில் பிரசவத்துக்கு பின்னர் பெண்களுக்கான பராமரிப்பு பகுதி ஆகியவை செயல்பட்டு வருகின்றது.
அதிர்ச்சி வீடியோ
இங்கு நாளொன்றுக்கு சராசரியாக 10-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் நடைபெறுகிறது. இந்த வளாகத்தில் இயங்கிவரும் ஐந்து பிரிவுகளிலும் சேர்த்து சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் 5-வது தளத்தில் செயல்பட்டு வரும் பிரசவத்துக்கு பின்னர் பெண்களுக்கான பராமரிப்பு வார்டில், பிரசவம் ஆன தாய்மார்கள் மற்றும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்கள் என மொத்தம் 96 பெண்கள் தங்களின் பச்சிளம் குழந்தைகளுடன் சிகிச்சை பெற்று வருவதால், படுக்கைகள் இல்லை எனக் "பச்சிளம் குழந்தைகள் வைத்துள்ள தாய்மார்களை பச்சிளம் குழந்தைகளுடன் கீழே படுக்க வைத்ததாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்ப்பிணிப் பெண்ணை மீட்ட எம்எல்ஏ
இந்தநிலையில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திடீரென காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது திருப்பருத்திகுன்றம் பகுதி சேர்ந்த பெண் சிகிச்சைக்கு வரும் பொழுது, திடீர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்நேரத்தில் அவர்களை மீட்டு செல்ல வீல் சேர், படுக்கையை இல்லாததால் எம்எல்ஏ மீட்டு பிரசவ பிரிவில் அனுமதித்து பெண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது மருத்துவரிடம், உதவி மையம் அப்பகுதியில் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அலட்சியம் இருக்கக்கூடாது என எச்சரிக்கை
மேலும் ஐந்தாவது மாடியில் படுக்கை வசதி இல்லாமல், தரையில் படுத்து இருந்த கர்ப்பிணி பெண்களிடம் நலம் விசாரித்து எவ்வளவு நாளாக இங்கு இருக்கிறீர்கள் ? என கேட்டதற்கு ஒரு சில பெண்கள் இரண்டு நாள் என கூறியதால், அதிர்ச்சி அடைந்த சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினரை சட்டமன்ற உறுப்பினர் எச்சரித்தார். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது எனவும், அலட்சியமாக அதிகாரிகள் இருக்கக் கூடாது எனவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு காரணமாக, மருத்துவமனை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.