விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் முடிவெடுப்பார் என கரூரில் ஜோதிமணி எம்.பி பேட்டியளித்தார்.
கரூர், ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு துறை அலுவலகத்தில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி-கரூரில் வேளாண்மை கல்லூரி சமுதாய கூடத்தில் இயங்கி வரும் நிலையில், அதற்காக புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. கரூர் பேருந்து நிலைய கட்டுமான பணியில் நீதிமன்ற தடை உத்தரவு இருக்கிறது. மாநகராட்சி அதற்கான தீர்வுகள் எடுத்து வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு ஒரு வரவேற்க தக்க மாநாடு. அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் தேவையில்லை. மது ஒழிப்பு மாநாட்டில் காங்கிரஸ் கட்சி பங்கேற்பது தொடர்பாக மாநில தலைவர் முடிவெடுப்பார். தமிழக முதல்வர் வெளிநாடு சென்றுள்ளார் அவர்தான் திமுகவின் தலைவர். எனவே, வந்தவுடன் அவருக்கும் மாநாட்டிற்கான அழைப்பு விடுக்கப்படும் என நினைக்கிறார்.
கரூருக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்க்கான கோரிக்கை மத்திய அரசிடம் கடந்த ஐந்தாண்டுகளாக வைக்கப்பட்டு வந்தது. தற்போதும் அது குறித்து கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டே தான் உள்ளது என்றார்.