இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 5 (இன்று) முதல் 8 ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார். குடியரசு தலைவர் முர்மு பதவியேற்ற பிறகு முதல்முறையாக தமிழ்நாடு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பயணம்:
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னைக்கு வருகிறார். இந்திய விமானப்படையில் விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்படும் அவர், கர்நாடக மாநிலம் மைசூர் விமான நிலையத்திற்கு பிற்பகல் 2.55 மணிக்கு வருகிறது. அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் தமிழ்நாட்டில் உள்ள முதுமலை தேசிய வனப்பகுதிக்கு மாலை 3.35 மணிக்கு சென்று 3.45 வரை ஓய்வு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை 4.45 வரை சுற்றி பார்த்துவிட்டு, ஆஸ்கர் வென்ற யானை பாகன்களான பொம்மன் மற்றும் பெள்ளியை சந்தித்து பேசி பாராட்ட இருக்கிறார்.
மீண்டும் மாலை 5 மணிக்கு முதுமலையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூர் செல்லும் அவர், 5.40 மணிக்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு மாலை 6.50 மணிக்கு வந்தடைய இருக்கிறார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பயண விவரங்கள்:
ஆகஸ்ட் 5 : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதுமலை புலிகள் காப்பகத்திற்குச் சென்று , தமிழ்நாட்டின் யானை பாகன்களான பொம்மன் மற்றும் பெள்ளியை சந்தித்து உரையாடுகிறார். நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் கூற்றுப்படி, மாவட்டத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க படகா சமூகம் உட்பட பழங்குடியின மக்களையும் சந்தித்து பேச இருப்பதாக தெரிகிறது.
ஆகஸ்ட் 6: சென்னையில் நடைபெறும் சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது விழாவில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார் . அதே நாளில், சென்னை ராஜ்பவனில், தமிழ்நாட்டின் பிவிடிஜி உறுப்பினர்களையும் சந்தித்து, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து, ராஜ்பவனின் தர்பார் மண்டபத்தை பாரதியார் மண்டபம் எனப் பெயர் மாற்றும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்கின்றனர். இந்த விழா பகல் 12 மணிவரை நடைபெற்று முடிந்ததும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆளுநர் மாளிகைக்கு சென்று அங்கு மதிய உணவு அருந்துகிறார் என்றும் கூறப்படுகிறது.
ஆளுநர் ஆர். என். ரவி வழங்கும் இரவு விருந்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிரார். இந்த விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்களான பொன்முடி, துரை முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். மேலும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தூதரக அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்களும் இந்த விருந்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
ஆகஸ்ட் 7: புதுச்சேரி ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஜிப்மர்) புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் லீனியர் ஆக்சிலரேட்டர் உபகரணத்தை ( linear(particle)accelerato) குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார் . தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் வில்லியனூரில் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை திறந்து வைக்கிறார் என்றும், புதுச்சேரி அரசாங்கத்தால் அவருக்கு வழங்கப்படும் குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 8: ஆரோவில்லில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிட்டு அங்கு நடைபெற இருக்கும் மாநாட்டையும் தொடங்கி வைக்கிறார்.