பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று சென்னை வருகிறார். அவரை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்க உள்ளார். 


புதுடெல்லியில் இருந்து இந்திய விமானம் மூலம் புறப்படும் அவர், கர்நாடக மாநிலம் மைசூருக்கு இன்று பிற்பகல் 2.55 மணிக்கு செல்கிறார். அதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தமிழகத்தில் உள்ள முதுமலை தேசிய வனப்பகுதிக்கு பிற்பகல் 3.35 மணிக்கு செல்கிறார். தொடர்ந்து 10 நிமிடம் ஓய்வு எடுத்துவிட்டு முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட இடங்களை 4.45 மணிவரை சுற்றிப்பார்க்க இருக்கிறார். மேலும் யானை பாகன்களுடன் கலந்துரையாடிவிட்டு ஆஸ்கர் விருது வென்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை சந்தித்து பாராட்டு தெரிவிக்க உள்ளார் குடியரசுத்தலைவர். 


இதையடுத்து மாலை 5 மணிக்கு முதுமலையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு இன்று மாலை 6.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைவார். அவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்கிறார். 


அங்கிருந்து குடியரசுத்தலைவர் இரவு 7 மணிக்கு புறப்பட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை ராஜ்பவனுக்கு செல்கிறார். இரவு உணவை அங்கேயே முடித்துவிட்டு தங்குகிறார். பின்னர் நாளை ராஜ்பவனில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு அண்ணா பல்கலைகழகத்தில் நடக்கும் சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். மேலும், விழா முடிந்ததும் மீண்டும் ராஜ்பவனுக்கு செல்கிறார். அங்கு மதிய உணவு அருந்திவிட்டு முக்கிய பிரமுகர்களை சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. 


நாளை பிற்பகல் 3.15 மணி முதல் 3.45 மணிவரை தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரதிநிகளுடன் குடியரசுத்தலைவர் கலந்துரையாடல் நடத்துகிறார். மாலை 7 மணியளவில் கிண்டி ராஜ்பவனில் உள்ள பாரதியார் படத்தை திறந்துவைக்க உள்ளார். மேலும் அங்குள்ள தர்பார் அரங்கத்திற்கு பாரதியார் பெயரை திரௌபதி முர்மு சூட்டுகிறார். மேலும் கலாசார நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். 


பின்னர் இரவு 8 மணிக்கு ஜனாதிபதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அதற்கான அழைப்பை ஆளுநரின் செயலாளர் நேரில் சென்று முதலமைச்சரிடம் கொடுத்து உள்ளார். அவர்கள் தவிர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தூதரக அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்களும் இந்த விருந்தில் கலந்து கொள்கின்றனர்.


நாளை இரவும் ஆளுநர் மாளிகையிலேயே தங்கிவிட்டு நாளை மறுநாள் காலை விமானநிலையத்திற்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு செல்கிறார். அங்கு ஜவகர்லால் முதுகலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் லீனியர் ஆக்சிலரேட்டர் உபகரணத்தை தொடங்கி வைக்கிறார். 8-ந் தேதி ஆரோவில்லில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிட்டு அங்கு நடக்கும் மாநாட்டையும் தொடங்கி வைக்கிறார்.