மேட்டூர் அணையை திறக்க வேண்டும், கர்நாடகாவிடம் உரிய தண்ணீரை பெற்று கொடுக்க வேண்டும், மேகதாது அணை கட்டுமானத்தை சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும், ராசிமணல் கட்டுமானப் பணியை உடனடியாக துவங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதி கேட்டு பேரணியை துவக்கி உள்ளனர். நேற்று பூம்புகாரில் துவங்கி தஞ்சை, திருச்சி மாவட்டம் வழியாக மாலையில் கரூர் லைட்ஹவுஸ் கார்னர் வந்தடைந்தனர். 


வாகனங்களில் வந்த விவசாயிகள் அங்கு இறங்கி நடை பயணமாக பழைய பை-பாஸ் சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக பேருந்து நிலையம் அருகில் முடிவடைந்தது. அங்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து வாகனங்களில் நாமக்கல்லை நோக்கி சென்றனர். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பி.ஆர்.பாண்டியன்,


 




 “தமிழ்நாட்டில் விலை நிலங்களை கார்ப்பரேட்டிற்கு தாரை வார்க்கும் முதலமைச்சர், தமிழ்நாடு அரசு கார்ப்பரேட்டுகளோடு கைகோர்த்துக்கொண்டு காவிரி நீரை பெற்று தர மறுக்கிறது. முல்லைப் பெரியாறு அணையை உரிய முறையில் உயர்த்துவதற்கு மறுக்கிறது. கேரளா அரசாங்கம் புதிய அணை கட்டுவதற்காக முயற்சியை தடுத்து நிறுத்த தமிழ்நாடு முதலமைச்சர் முன் வரவில்லை. மௌனமே பதிலாக சொல்கிறார். ஒட்டுமொத்தமாக தமிழக நீர் ஆதாரத்தை அழித்துவிட்டு சிப்காட்டிற்கு விலை நிலங்களை கைப்பற்றும் என்ற பெயரில் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடிமைப்படுத்த முயற்சிக்கிறார். 


 


 




இங்கிருக்கும் டெல்டா விவசாயிகளை ஹைட்ரோ கார்பன், மீத்தேன் பேரழிவு திட்டங்களுக்கு விலை நிலங்களை பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதற்காக காவிரி நீரை பெற்றுக் கொடுப்பதற்கு மறுக்கிறார். தண்ணீரை கொடுக்க மறுத்தால் விளைநிலங்களை விட்டு விவசாயிகள் வெளியேறி விடுவார்கள் அதனை கார்ப்பரேட்டிற்கு விற்று விடலாம் என்ற வக்கிர புத்தியுடன் முதலமைச்சர் செயற்படுகிறார். ஏற்கனவே டெல்டாவை அழிப்பதற்கு ஒப்பந்தம் போட்டவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை இன்றும் டெல்டா விவசாயிகள் மறக்கவில்லை மன்னிக்கவில்லை. எனவே மீண்டும் இந்த நிலைக்கு தள்ளப்படுமே. ஆனால் வரும் 2026 தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு விவசாயிகள் ஒன்று படுவார்கள். எப்படி இந்திய அளவில் மோடிக்கு எதிராக விவசாயிகள் வாக்களித்து ஆட்சி நடத்துவதற்கு தகுதி இல்லை என நிரூபித்திருக்கிறார். அதே நிலை திமுகவுக்கும் ஏற்படும். 


 


 




விவசாயிகளைக் கண்டாலே முதலமைச்சர் சந்திக்க மறுக்கிறார். அவரை நாங்கள் ஏன் சந்திக்க வேண்டும். எங்களுக்கு வாக்களிக்கும் தகுதியும் வீரமும் அதற்கான முழு துணிவு உள்ளது. எங்களை நாடி வாக்கு கேட்க வருகிற போது அவருக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். அவர் இன்றைக்கு எங்களை அவமதிக்கலாம், சந்திக்க மறுக்கலாம், அழைத்துப் பேச மறுக்கலாம், எங்கள் கோரிக்கைக்கு மதிப்பளிக்க மறுக்கலாம் அவர் எங்களிடம் வாக்கு கேட்டு வரும்போது ஒன்றுபட்டு அவருக்கு எதிராக வாக்களிக்க தயாராக உள்ளோம்.


 




மேகதாது அணை கட்ட கர்நாடக மக்கள் முற்றிலும் எதிராக இருக்கிறார்கள் அந்த அணை கட்டப்பட்டால் கர்நாடகாவில் 50 லட்சம் குடும்பங்கள் நூற்றுக்கணக்கான கிராமங்கள் அழியும் என்பதால் கனகபுரா தொகுதியில் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் சகோதரர் ரவி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க பட்டிருக்கிறார். அந்தத் தொகுதியில் நீண்ட நாட்களாக எம்பியாக செயல்பட்ட நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கு சிவக்குமார் வேகமாக நடை போடுகிறபோது அங்கே பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவரது தம்பி ரவி இன்றைக்கு தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார். இதுதான் கர்நாடகாவின் நிலை தமிழ்நாடு முதலமைச்சர் உலகத்தை புரிந்து கொள்ளாமல் அவர் விவசாயிகளை அவமதித்து வருகிறார்.  கேரளாவில் சோம் அண்ணாவுக்கு ஜல்சக்தி துறை இணையமைச்சர் பிரதமர் மோடி கொடுத்ததின் மூலம் தென்னிந்திய ஒற்றுமையை சீர்குளிக்க முயற்சிக்கிறார்” என்று பேசினார்.