Amit Shah Tamilisai: முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிப்புடன் பேசும் வீடியோ பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
அண்ணாமலையை சீண்டிய தமிழிசை:
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்களவை தேர்தலில் தென்சென்னையில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தோல்வியை தழுவினார். இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, ”நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியில் நான் தலைவராக இருந்த போது கட்டுப்பாடு இருந்தது. சமூக விரோத ரவுடிகள் போல இருப்பவர்களை கட்சிக்குள் விட மாட்டேன். இப்போது அப்படி கட்சியில் சிலர் சேர்க்கப்பட்டு உள்ளனர” என பேசியிருந்தார். ஏற்கனவே அண்ணாமலை வார் ரூம் வைத்து கட்சியின் மற்ற தலைவர்களை ஓரம்கட்டுவதாக குற்றச்சாட்டுகள் நிலவும் சூழலில், தமிழிசையின் பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழிசையை கண்டித்த அமித் ஷா?
இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா கன்னாவரத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்று மேடையில் அமர்ந்திருந்த அமித் ஷா, முன்னாள் துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தமிழிசை இருவரையும் நோக்கி வணக்கம் வைத்து விட்டு கடந்து சென்றார். திடிரென ஏதோ நியாபகம் வந்ததாக, அமித் ஷா தமிழிசையை அழைத்தார். எதையோ செய்ய வேண்டாம் என கூறுகிறார். தமிழிசை அதற்கு விளக்கம் கொடுக்க முயல, அதனை ஏற்க மறுத்து திட்டவட்டமாக இதெல்லாம் செய்ய வேண்டாம் என்பதை போல சைகை செய்து அறிவுறுத்தி அனுப்பினார். இதனை பார்த்த பலரும், மாநில தலைமைக்கு எதிராக தமிழிசை பேசியது பாஜக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே, அமித் ஷா தமிழிசையை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
கட்சி மேலிடம் கட்டுப்பாடு:
தமிழிசை அண்ணாமலையை மறைமுகமாக சாடிய நிலையில், கல்யாணராமன் என்பவரும் சமூக வலைதளங்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வந்தார். தமிழ்நாட்டில் கட்சியை மிகப்பெரிய அளவில் வளர்க்க தலைமை முடிவெடுத்து அதற்கான முன்னெடுப்புகளை எடுக்க திட்டமிட்டிருக்கும் நிலையில், உட்கட்சி மோதல்களை கட்சி தலைமை விரும்பவில்லை. இதன் காரணமாக, இனி மாநில தலைவர்கள் யாரும் தேவையின்றி பேசக் கூடாது என்றும், செய்தியாளர் சந்திப்போ, நேர்காணல்களோ ஊடகங்களை சந்தித்தால் முறைப்படி மாநில தலைமைக்கு தகவல் தெரிவித்த பிறகே பேச வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.