சென்னைக்கான காலநிலை மாற்ற வரைவு செயல் திட்டம்: வரவேற்பும் கருத்தும் - பூவுலகின் நண்பர்கள் அறிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சியானது, C40 Cities மற்றும் Urban Management Centre ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 426 சதுர கிலோமீட்டர் பரப்புடைய சென்னை மாநகராட்சியை காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும் அதன் பாதிப்புகளைத் தணிப்பதற்கான சென்னைக்கான காலநிலை மாற்ற செயல்திட்டா Chennai Climate: Change Action Plan) அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது. மாநில, நகர அளவிலான அரசுத் துறைகள், தொழில்நுட்ப நிபுணர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் இச்செயல்திட்டத்தின் வரைவு ஆகியோருடன் அறிக்கையானது கலந்தாலோசித்து பொதுமக்கள் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை மீது செப்டம்பர் 26ம் தேதி வரை chennaiclimateactionplan@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாக கருத்து தெரிவிக்கலாம்.
2050ம் ஆண்டிற்குள் கார்பன் சமநிலை (Carbon Neutrality) மற்றும் நீர் சுழற்சி பாதிக்காத வகையில் நீர் பயன்பாட்டை நெறிப்படுத்துவது ஆகிய இரண்டு இலக்குகளை அடைய ஆறு முக்கியமான துறைகளில் பல்வேறு செயல்திட்டங்களை இந்த வரைவு அறிக்கை முன்மொழிந்துள்ளது.
- மின்சார உற்பத்தியில் கார்பன் பயன்பாட்டை அகற்றி புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகப்படுத்த 8 செயல்திட்டத்தையும்;
- அதிக கார்பன் வழித்தடம் இல்லாத கட்டிடங்களை எழுப்புதல்; குறைவாக மின்சாரம் கொண்டு திறன் மிகு கட்டிடங்களாக அவற்றை மாற்றுவது தொடர்பாக 8 செயல்திட்டங்களையும்;
- போக்குவரத்துத் துறையில் 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயங்கும் பொதுப் போக்குவரத்தை உருவாக்குவது;
- நகரின் பயணங்களிலும் 80% பயணங்களை பொதுப்போக்குவரத்து, நடந்து மற்றும் மிதிவண்டியில் மேற்கொள்ளும் வகையில் மாற்றுவது;
உள்ளிட்ட செயல்திட்டங்களையும், வளங்குன்றா கழிவு மேலாண்மையில் 100% கழிவுகளைப் பெறுதல் மற்றும் வகைப் பிரித்தல் 100% பரவலாக்கப்பட்ட/மையப்படுத்தப்படாத வசதிகளை உள்ளிட்ட 11 செயல் திட்டங்களையும் நகர்ப்புர வெள்ளம் மற்றும் நீர்ப் பற்றாக்குறை மேலாண்மையில் 17 செயல்திட்டங்களையும், காலநிலை மாற்றத்தால் பாதிப்படையகூடும் நிலையில் உள்ள மக்கள் மற்றும் அவர்களின்
ஆரோக்கியம் தொடர்பாக 12 செயல்திட்டங்களையும் இந்த வரைவு அறிக்கை விரிவாகப் பேசுகிறது.
மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்த காலநிலை மாற்றத்திற்கான துறையானது மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) தலைமையில் உருவாக்கப்படும் எனவும் அத்துறையில் தணிப்பு மற்றும் தகவமைத்தல் தொடர்பான ஆராய்ச்சிகள், கண்காணிப்புகள் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் மாண்டல மற்றும் வார்டு அளவில் அளவில் காலநிலை அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்புகள்
சென்னைக்கான வெள்ள அபாய பாதிப்புகளாக அறிக்கை கூறுவது:
- 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படக்கூடிய வெள்ளத்தால் சென்னையின் 29.1% நிலப்பகுதி பாதிக்கக் கூடிய அபாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
- 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படக்கூடிய வெள்ளத்தால் சென்னையின் 46% நிலப்பகுதி பாதிக்கக் கூடிய அபாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
- 100ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படக்கூடிய வெள்ளத்தால் சென்னையின் 56.5% நிலப்பகுதி பாதிக்கக் கூடிய அபாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடல் மட்ட உயர்வு பாதிப்புகள்
2100-க்குள் சென்னையின் 16% நிலப்பகுதி (67 சதுர கி.மீ) நிரந்தரமாக கடலில் மூழ்கும் எனவும், சென்னையில் வாழக்கூடிய 10 இலட்ச மக்கள் பாதிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளது.
- சென்னையில் உள்ள 275 குடிசைப்பகுதிகளில் 17% குடிசைப்பகுதிகள் பாதிக்கப்படும், கிட்டத்தட்ட 2.6 இலட்ச மக்கள் பாதிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
- சென்னையில் உள்ள 275 குடிசைப்பகுதிகளில் 17% குடிசைப்பகுதிகள் பாதிக்கப்படும். கிட்டத்தட்ட 2.6. இலட்ச மக்கள் பாதிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
- ஆற்றங்கரை ஓரத்தில் மற்றும் முகத்துவார பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளது.
- தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் அமைத்த 7500 மாற்று குடியிருப்பும் கடல் மட்ட உயர்வினால் பாதிக்கப்படும்.
கடல் மட்ட உயர்வினால் பாதிக்கப்படும் கட்டமைப்புகள்
- அடுத்த 5 ஆண்டிற்குள் 7 செமீ கடல் மட்ட உயர்வால் 100 செ.மீ கடற்கரைப் பகுதிகள் கடலில் மூழ்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
- வடசென்னை அனல்மின் நிலையமும் கடல்நீர் மட்ட உயர்வால் பாதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது,
கடல் மட்ட உயர்வினால் பதிக்கப்படும் சமூக கட்டமைப்புகள்
- பேரிடர் நிவாரண மையங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் அதிகமாக உள்ளது. அதைத் தொடர்ந்து சமுதாயக் கூடங்கள், அரசு பள்ளிகள் கடல் மட்ட உயர்வினால் பாதிக்கும் அபாயம் உள்ளது.
- பேரிடர் காலத்தில் தங்குமிடங்களாக உள்ள இடங்கள் கடல்நீர் மட்ட உயர்வால் மிகவும் பாதிப்படையக்கூடியதாக உள்ளது.
அதிகரிக்கும் வெப்பத்தின் பாதிப்புகள்
- நீர்ப் பற்றாக்குறை காரணமாக 53% வீடுகள் வெளிப்புற நீர் ஆதாரங்களை நம்பியுள்ளன.
- சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகளில் 27% வீடுகளில் அஸ்பஸ்டாஸ் மேற்கூரையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சென்னையில் 8.9% வீடுகளில் அஸ்பஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வெப்ப அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும்.
- வெப்பத்தீவு விளைவின் காரணமாக இரவு நேரங்களில் குளுமையடைய காலநேரம் அதிகமாகிறது.
- வெப்ப உயர்வின் காரணமாக தீ விபத்துக்கள். வெப்ப அழுத்தம் போன்றவை ஏற்படலாம்.
அறிக்கையின் போதாமைகள்
- இத்திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டுள்ள பல தகவல்கள் முழுமை பெறாமலும், தொடர்பில்லாமலும், சில இடங்களில் ஒன்றுக்கொன்று முரணாகவும், தரவுகள் சரிவர விளக்கப்படாமலும் உள்ளன. இத்திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள எதிர்கால ஆபத்துக்கள் குறித்த சில தகவல்கள் போதிய அறிவியல் ஆதாரங்களுடன் இல்லாமல் இருக்கிறது.
- சென்னையின் பசுமை இல்ல வாயு உமிழ்வை (GHG inventory) குறிப்பிடுகையில் அனல்மின் துறையினால் வெறும் 2% பசுமை இல்ல வாயு மட்டுமே வெளியேறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் மின்சார ஆற்றல் உற்பத்தியில் தான் வேறு எந்த துறையைக் காட்டிலும் அதிகமான பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுகிறது என்பது உலகறிந்த உண்மை. ஆனால், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 2% உமிழ்வு என்பது எந்த வகையில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்கான விவரங்கள் (Methodology) அறிக்கையில் இல்லை.
- மக்களின் வீடுகள் 31% பசுமை இல்ல வாயுக்களுக்கு காரணமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மக்கள் ஒவ்வொருவரும்(per capita) 1.9டன் கார்பன் உமிழ்விற்கு காரணமாக உள்ளதாக கட்டம் கட்டி காட்டப்பட்டுள்ளது. சென்னையில் இயங்கும் 3330MW அனல் மின் நிலையங்களை மூடிவிட்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டால் சென்னையின் தனிநபர் கார்பன் உமிழ்வு என்பது 25-30% குறைந்து இருக்கும். மின் உற்பத்தியில் இருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களை மின் உற்பத்தியில் குறிப்பிடாமல், வீடுகளில் மின்சாரம் பயன்படுத்துவதால் வீடுகளின் மீது அந்த பழி சுமத்தப்பட்டிருப்பது என்பது மக்களை குறைச்சொல்லி அனல்மின் நிறுவனத்தை காப்பாற்றும் தன்மையாகவே தெரிகிறது.
- IPCC-ன் 6வது மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் 6 முறை சென்னையை குறிப்பிட்டுள்ளது, அந்த வகையில் சென்னைக்கான விரிவான காலநிலை மாற்ற பாதிப்பு ஆய்வுகளையும் செயல் திட்டங்களையும் நம் அரசு தான் முன்னெடுக்க வேண்டும். இப்படியான தனித்துவ ஆய்வுகள் அறிக்கையில் இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஏற்கனவே உள்ள சர்வதேச ஆய்வுகளின் தரவுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
- காலநிலை மாற்ற தணிப்பு நடவடிக்கைகளுக்கு (mitigation) புதிய திட்டங்களை வகுக்காமல் ஏற்கனவே உள்ள திட்டங்கள் நடவடிக்கைகளாக கணக்குக் காட்டப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
- காலநிலை செயல் திட்டத்தில் தணிப்பு நடவடிக்கைகளுக்கு (mitigation) கொடுக்கும் அளவிற்கான அதே முக்கியத்துவம் தகவமைத்தலுக்கும் (Adaptation) கொடுக்கப்பட வேண்டும். சென்னை காலநிலை மாற்ற செயல்திட்ட அறிக்கையில் ஆறு பிரிவுகளின் கீழ் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது, அதில் இரண்டு பிரிவுகளில் மட்டுமே தகவமைப்பு (adaptation) நடவடிக்கைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
- வெள்ளம், வறட்சி சூழலில், நீர் மேலாண்மை (Managing floods & water scarcity), சுகாதாரம் & காலநிலை மாற்றத்தை தாங்கும் வீடுகள் (Health & Cimate resilient houses) என்ற தலைப்புகளில் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் கூறப்பட்டுள்ளன. ஆனால், காலநிலை மாற்றத்தினால் தமிழகத்தில் ஏற்படப் போகும் பெரும் பிரச்சனைகளான வேலையின்மை, இடம்பெயர்தல், விளிம்பு நிலை மக்களுக்கு குறிப்பாக மீனவ மக்களுக்கு ஏற்படப் போகும் பொருளாதார இழப்புகள் (Livelihood, displacement, migration) ஆகிய சமூக பொருளாதார பிரச்சனைகளை பற்றி அறிக்கையில் போதுமான அளவில் பேசப்படவில்லை.
- காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படப்போகும் உணவு பற்றாக்குறை இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த வளரும் ஆசிய நாடுகளில் மிகப்பெரிய சிக்கலாக இருக்கும் என IPCC ஆய்வறிக்கை எச்சரித்துள்ள போதிலும், இந்த ஆவணத்தில் உணவு பாதுகாப்பு குறித்தும் (food security), தற்சார்பு நகரங்கள் (sustainable cities)குறித்தும், தொடர்ந்து பெருகிவரும் மக்கள்தொகை (over population) மற்றும் திட்டமிடாத நகர வளர்ச்சி {unplanned rapid urbanisation ) ஆகிய பிரச்சனைகளை குறித்து பேசப்படவில்லை.
- காலநிலை மாற்றத்தினால் ஏற்படப் போகும் பிரச்சனைகள் அனைவருக்கும் பொதுவானது என்றாலும், அப்பிரச்சனைகளின் தாக்கம் சமூகக் கட்டமைப்பில் பல்வேறு அடுக்குகளில் இருக்கும் ஒவ்வொருவரையும் வெவ்வேறு அளவில் பாதிக்கும் என்ற பட்சத்தில், அதுவும் இந்தியா போன்ற ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாட்டில் சமூக ஏற்றத்தாழ்வுகளில் அதிகம் கவனம் செலுத்தபடாமல் இந்த அறிக்கை தயாராகி இருப்பது வருத்தம் அளிக்கிறது குறிப்பாக அறிக்கையில் எந்த இடத்திலும் பெண்களுக்கெனவோ குழந்தைகளுக்கெனவோ பிரத்யேக செயல்திட்டங்கள் எதுவும் இல்லை. காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்பட போகும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிரச்சனைகள் போதுமான அளவில் பேசப்படவில்லை.
- சமீப காலங்களாக உலகத்தின் பல்வேறு பகுதிகள் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு வரும் இந்தச் சூழலில் வெப்ப அலைகள் (Heat waves) மற்றும் வெட் பல்ப் டெம்பரேச்சர் (wet bulb temperature ) பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் செயல்திட்டங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
- சென்னைக்கான கால நிலை மாற்ற தணிப்பு நடவடிக்கைகளுக்கென புதிய திட்டங்கள் வகுக்கப்படாத சூழலில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திட்டங்களும், பொதுப்பணித்துறையின் சில திட்டங்களும், மத்திய மாநில அரசுகளால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சில திட்டங்களும் காலநிலை மாற்ற தடுப்பு. மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளாக இந்த அறிக்கையில் கணக்கு காட்டப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக 2030ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் ஒன்றிய அரசின் திட்டமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் 20% எத்தனால் (Ethanol) கலப்பதினால் எவ்வளவு பசுமை இல்ல வாயுக்கள் குறையும் இச்செயல்திட்டத்தில் என்பதற்கான தரவுகள் இடம்பெற இல்லை. எத்தனால் உற்பத்திக்கு லட்சக்கணக்கான தேவையான டன் மூலப்பொருட்களை செய்யவும், அதன் உற்பத்தி போக்குவரத்திற்கும், அதை சுத்திகரிக்கப்பட்ட எத்தனாலாக மாற்றும் போதும் எந்த அளவிற்கு பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறும் என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் பெட்ரோலில் எத்தனால் சேர்க்கும் திட்டத்தினை காலநிலை மாற்ற தணிப்பு நடவடிக்கையாக முன்மொழிவது சரியான அறிவியல் பார்வையாக தெரியவில்லை.
- சென்னை கார்பன் சமநிலையை எட்டுவதற்கு அனல் மின் நிலையங்களை தவிர்த்து விட்டு 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அதற்கான செயல்திட்டம் குறிப்பிடப்படவில்லை.
- சென்னையில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பது வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்கள் தான், எனவே இந்த இரண்டு அனல் மின் நிலையங்களும் எவ்வளவு பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுகின்றன என்ற தரவுகளையும். சென்னையை அனல் மின் நிலையம் அற்ற பகுதியாக மாற்றுவதற்கான கால அளவுகளோடு கூடிய செயல் திட்டதையும் இந்த சென்னை காலநிலை மாற்ற திட்டத்தில் சேர்க்க வேண்டும்
என்பதனை பூவுலகின் நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
- சென்னையின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பையிலிருந்து ஆற்றல் பெறுதல் மற்றும் சாம்பலாக்கிகள் போன்ற தொழில்நுட்பங்கள் முன்மொழியப்பட்டிருக்கின்றன. கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைப்பது பற்றிய திட்டங்களுக்கான தொழில்நுட்பங்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. குறிப்பாக WTE (Waste to Energy) எனப்படும் கழிவிலிருந்து ஆற்றல் பெறும் தொழில்நுட்பம் மூலம் பெறப்படும் மின்சாரமானது . உலகில் மிக அதிக உமிழ்வுக்குக் காரணமாகவும் அதேநேரத்தில் ஐபிசிசி உடனடியாகக் கைவிடவும் வேண்டியதுமாக இருக்கும் நிலக்கரி மின்சாரத்தைவிட அதிக உமிழ்வை ஏற்படுத்துபவையாக இருக்கின்றது. கூடுதலாக இவற்றிலிருந்து கார்பன் டை ஆக்சைடு மட்டுமின்றி பல்வேறு நச்சுவாயுக்கள் வெளிவருவதும், இவற்றின் 'fly ash மற்றும் bottom ash' போன்றவை நச்சுத் தன்மையோடு இருப்பதையும் மெய்ப்பித்திருக்கின்றன. இந்தியாவிலேயே சாம்பலாக்கிகளின் மிக மோசமான விளைவுகளுக்கு ஏராளம் உதாரணங்கள் இருக்கின்றன. Pyrolysis, Plasma, Gasification என வெவ்வேறு பெயர்களில் சொல்லப்படும் வெவ்வேறுவிதமான குப்பை சாம்பலாக்கிகள் எவையும் இந்த பிரச்சினைகளுக்கு விதிவிலக்கு அல்ல குப்பைகளைச் சாம்பலாக்கும் தொழில்நுட்பங்கள் அதிக வளங்களை எரித்து அழிப்பவையாகவும், அதிக செலவு பிடிப்பவையாகவும் குறிப்பாக ஆற்றல் உற்பத்தி செய்யும் நிலையங்கள் தொடர்ந்து குப்பை தேவைப்படுபவையாகவும் இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் முதல் பாகிஸ்தான் போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் வரையில் சாம்பலாக்கிகளிலிருந்து வெளியேறி வருகின்றன. சூழலைப் பாதுகாக்க 'கழிவில்லா நிலை'யை (zero waste) அடைய நகரவேண்டிய சூழலில் தன் இயக்கத்துக்கு அதிக அளவில் குப்பைகள் தேவைப்படும் அதிக உமிழ்வும் நச்சுக்களையும் உருவாக்கும் ஒரு உட்கட்டமைப்பை திட்டமிடுவது அறிவுடமையல்ல.
இந்த அறிக்கையானது காலநிலை மாற்றத்தின் அபாயங்கள் குறித்த பல்வேறு தரவுகளைக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. நீண்ட நாட்களாக தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கப் போராடிவரும் விளிம்பு நிலை மக்களும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க செயல்பட்டு வரும் சூழலியல் அமைப்புகளும் கூறிவந்த விஷயங்கள் அனைத்தையும் அரசே இந்த அறிக்கையில் தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
சென்னையில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது விளிம்பு நிலை மக்களாக உள்ள நிலையில் இந்த வரைவு செயல்திட்ட அறிக்கையானது ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வறிக்கை தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டு அனைத்துத் தரப்பு மக்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும் வகையில் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். காலநிலை மாற்றத்தின் தீவிரமானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற செயல்திட்டங்கள் மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் புதுப்பிக்கப்படும் வகையில் இருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.