சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 25 வது ஆண்டு நிறைவுநாள் வெள்ளிவிழா மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாள்-சமூகநீதி நாள் நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது மாணவர்கள் இடையே உரையாற்றிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அரசியல் கலப்பில்லாத முப்பெரும் விழா. ஈரோட்டை போல சேலமும் பெரியார் மண்தான். பெரிய பாராட்டுக்குரிய நிகழ்வு. பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி கற்பது பெரியார் செய்த சாதனை. பெரியாருக்கு எந்தக் கடவுள் மீதும் எந்த மதத்தின் மீதும் கோபம் இல்லை. எல்லோரும் சமமாக நடத்த வேண்டும் என்றுதான் பெரியார் சொன்னார். 50 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி மற்றும் வகுப்பறையில் ஒரேயொரு பெண் பயின்ற நிலையில், இன்றைக்கு அறை முழுவதும் கல்வி பயில்கின்றனர். அந்த அளவிற்கு மகளிருக்கான வாய்ப்பை உருவாக்கித்தந்தது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. அதன் தொடர்ச்சியாக முதல்வர் ஸ்டாலின் அரசுப் பணிகளில் 50 சதவீத வாய்ப்பினை பெண்களுக்கு வழங்கியுள்ளார்.
சமூக நீதி பாடம் பள்ளிகளுக்கு மட்டுமல்ல. கல்லூரிகளிலும் பாடமாக கொண்டு வர வேண்டும். குழந்தைத் திருமணம் கூடாது என்ற நடைமுறையை கொண்டு வந்தது நீதிக் கட்சிதான். பெண்களுக்கு கல்வி வாய்ப்பை கொண்டு வந்ததுதான் சமூக நீதி. திராவிட மாடல் ஆட்சி. பெண்களுக்கு மட்டுமல்ல. தாழ்த்தப்பட்டவர்கள் வீதிகளில் நடக்கவும், கோவிலுக்கு செல்லவும் தடை விதித்த நிலை மாறியதும் திராவிட மாடல் ஆட்சியில்தான். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று கொண்டு வந்தது திராவிட மாடல் ஆட்சி. நாங்கள் அனைவரும் இந்துக்கள்தான். இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை. அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும். ஜாதிய அடிப்படையில் வேறுபாட்டுடன் நடத்துவதையே எதிர்க்கிறோம். ஒரிஜனலாக இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் திராவிடர்கள்தான். ஜாதிய வேறுபாடுகள் மாற்றம் கண்டதற்கு பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் இன்றைய முதல்வர் ஸ்டாலின்தான் காரணம். சமூக சமத்துவத்தை உறுதி செய்துள்ளோம். சமூக நீதி நாள் அதற்காகத்தான் கொண்டாடப்படுகிறது. அடித்தளத்து மக்கள் தொடர்ச்சியாக போராடியதால்தான் சமத்துவம் கிடைத்தது. சமூக நீதி மற்றும் சமத்துவம் இரண்டும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய இட ஒதுக்கீட்டை வழங்கியது சமூக நீதியாக உள்ளது. மத்திய அரசுப் பணிகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை கலைஞர்தான் பெற்று தந்தார். தமிழகத்தின் சமூக நீதி வரலாற்றை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். பிறருக்கு சொல்லித் தரும் நிலையில் இருக்கிறீர்கள். சமூக நீதி என்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் முன்னேற பாடுபட வேண்டும். ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம், ஒரே ஜாதி ஒரே சாப்பாடு என சொல்கிறார்கள். சாப்பாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்க முடியும். இது இந்த நாட்டிற்கு சரியாக வராது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது நம்முடைய நாட்டின் பெருமை. பல்வேறு தரப்பினர் இருக்கும் நாட்டில் ஒரே அடைமொழியில் மாற்ற முடியாது. ஒரே மொழி என்கிற சூழ்நிலையை உருவாக்க முயல்கின்றனர். இருமொழி கொள்கையை அண்ணா கொண்டு வந்தார். பொறியியல் கல்லூரிகளில் தமிழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் முதல் மற்றும் 2-ம் ஆண்டுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படுகிறது. இதை மூன்று மொழியாக்க பார்க்கின்றனர். இருமொழிகளை பயில்வதே கடினம். மூன்றாவது மொழியை எப்படி பயில முடியும். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில வழிக் கல்வி மட்டுமே உயர்கல்வி பாடங்கள் இருந்தது. தமிழ்வழியில் பள்ளி பாடங்களை பயின்றவர்கள் ஆங்கிலத்தில் கற்க மிகவும் சிரமப்பட்டனர். தமிழ் நம் தாய்மொழி என்பதால் படிக்க வேண்டும். ஆங்கிலம் என்பது பன்னாட்டு தொடர்பிற்காக படிக்க வேண்டும். தமிழ் ஆங்கிலம் தெரிந்தால் மும்பை போனாலும் சரி அமெரிக்கா போனாலும் பிழைத்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டிற்கு தனி கல்விக் கொள்கைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. மொழிக் கொள்கை மற்றும் கல்வித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். படிப்பு மட்டுமே போதாது. சமுதாயம் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது. 2007-ம் பொறியியல் கல்வி நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நுழைவுத் தேர்வில் எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும். நுழைவு தேர்விற்கு முன்பு 25 ஆயிரம் பேரும், ரத்து செய்யப்பட்ட பிறகு 77 ஆயிரம் பேர் கிராமப்பகுதிகளில் இருந்து பயிலும் நிலை உருவானது.
மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. பொறியியல் கல்விக்கே வேண்டாம் என்று சொல்லி விட்டோம். மருத்துவக் கல்விக்கு நீட் வேண்டாம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றுதான் தமிழக அரசு கல்வி கொள்கையில் திட்டம் வகுத்து வருகிறது. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி கற்பது பாதிக்கப்படும். தொழிலுக்கேற்ப கல்வி கொண்டு வர வேண்டும் என்பதை மாற்றியதுதான் திராவிட மாடல் ஆட்சி. அனைத்து ஜாதியினர், அனைத்து மதத்தினரும் ஒன்றுதான். எல்லோரும் மனிதர்கள் என்ற உணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காக சமூக நீதி நாள் கடைப்பிடிக்க படுகிறது. மாணவிகள் பெற்றோரிடம் பணம் கேட்ட காலம் போய், மகளிடம் பெற்றோர் பணம் கேட்கும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சியில் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார்.