கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரூர் மட்டுமின்றி, நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்கள் கரூருக்கு பஸ்களில் வந்து அதன் பிறகு ஆட்டோ அல்லது உள்ளூர் டவுன் பஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு செல்கின்றனர். கரூர் நகரத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இருசக்கர சொந்த வாகனங்களில் மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
கல்லூரி மருத்துவமனையில் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி போதுமான அளவில் இல்லை. கல்லூரி வளாகத்தின் வெளியில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இச்சூழலில் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குள் கொண்டு வரும்போது பல நேரங்களில் பாதையை இல்லாத அளவுக்கு இரு சக்கர வாகனங்களை குறுக்கே நிறுத்தி விடுகின்றனர். இதனால், வழியில் நிற்கும் வாகனங்களை ஒதுக்கி வைத்து விட்டு அதன் பிறகு ஆம்புலன்ஸ் செல்லும் நிலை உள்ளது.
இதனால், காலதாமதம் ஏற்பட்டு, அவசர சிகிச்சை நோயாளிகள் உயிரிழக்கும் நிலை உள்ளது. எனவே, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே தேங்கிய குப்பை - நோய் பரவும் அபாயம்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சுற்றிலும், டன் கணக்கில் குவிந்து கிடக்கும் குப்பையால் மருத்துவமனை பகுதியிலேயே நோய் பரவும் அபாயம் உள்ளது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, தோல், இருதயம் உட்பட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
880 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்வெளி நோயாளிகள் வந்து செல்கின்றன. இந்த மருத்துவமனையில், 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றன. மருத்துவமனையைச் சுற்றியுள்ள காலி இடத்தில் மருத்துவமனை கழிவுகள், வீடுகளின் குப்பை, இறைச்சி கழிவுகள் என டன் கணக்கில் குப்பை மழை போல் குவிந்துள்ளன. இதனால், அங்கு ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிவதோடு, குப்பையை கிளறி வருகின்றன.
பல நேரங்களில் தெருநாய்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்களை கடிக்கின்றன. மேலும், மழை பெய்யும் போது குப்பை, மருத்துவ கழிவுகளில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி தோற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, உடனடியாக களைவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றன.