பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்ப தமிழக அரசு 16,932 சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. 


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இம்முறை ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை வருவதால், வெளியூரில் இருக்கும் பெரும்பாலானோர் வியாழக்கிழமை (ஜனவரி 12) முதலே சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை இருப்பதால் நீண்ட நாட்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கும் வகையில் முன்கூட்டியே பயணத்திற்கு திட்டமிட்டுள்ளனர். 






அந்த வகையில் வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்பு தெற்கு ரயில்வேயால் அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் தீர்ந்து போனது. இதனால் ரயிலில் பயணிக்க நினைத்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். 


அதேசமயம் ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊருக்கு செல்ல வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அரசுப் பேருந்துகளை நாடியுள்ளனர். தமிழக அரசின் போக்குவரத்துறை துறையால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளில் விறுவிறுப்பான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்ப தமிழக அரசு 16,932 சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. 


இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் முடிவுற்ற பிறகு, போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் ஜனவரி 12 ஆம் தேதி கூடுதலாக 2,751 பேருந்துகளும், 13 ஆம் தேதி கூடுதலாக 3,955 பேருந்துகளும், 14 ஆம் தேதி 4,043 பேருந்துகளும் என மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து 6, 183 பேருந்துகள் இயக்கப்படுகிறது. 


இதேபோல் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர ஜனவரி 16 ஆம் தேதி 4,334 பேருந்துகளும், 17 ஆம் தேதி 4,961 பேருந்துகளும், 18 ஆம் தேதி 6300 பேருந்துகள் என மொத்தம் 15,595 இயக்கப்படுவதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.