பொங்கல் பரிசு தொகுப்பு:


தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, பயனாளர்களுக்கு பச்சரிசி, சக்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு இல்லாததற்கு அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதைதொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பும் இடம்பெறும் எனவும், இதனால் விவசாயிகள் பயனடைவர் என்றும் தமிழக அரசு அறிவித்தது.


டோக்கன் விநியோகம்:


அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் மாநிலம் முழுவதும் தொடங்குகிறது. வரும் 8ம் தேதிக்குள் அனைத்து பயனாளர்களுக்கும் டோக்கன் விநியோகம் செய்து முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரேஷன் கடை ஊழியரகள் வீடு வீடாக சென்று பயனாளரகளுக்கு டோக்கன்களை வழங்க உள்ளனர். தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பரிசுப்பொருட்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில், எந்நேரத்தில் வந்து பொருட்களை பெற வேண்டும் என்ற விவரங்கள் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டு பயனாளர்களுக்கு  வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 பெறுவதற்காக பயனாளர்கள் ஒரே நேரத்தில் கூடி,  ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க டோக்கன் முறை செயல்படுத்தப்படுகிறது. 


பொங்கல் பரிசு பெறுவது எப்படி?


பொங்கல் பண்டிகைக்கான பச்சரிசி மற்றும் சர்க்கரை பெற ஸ்மார்ட் கார்ட்டுடன், குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவரின் கைரேகையையும் பதிவு செய்ய வேண்டும். ரூ.1000 ரொக்கம் பெறவும் கைரேகைப் பதிவு  முறை அவசியமாக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


புகார் தெரிவிக்கலாம்:


டோக்கனில் குறிப்பிட்டப்பட்டிருக்கும் தேதி, நேரம் ஆகியவற்றை  அறிந்து மக்கள் எவ்வித சிரமும் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். அதேசமயம் பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறைகள் இருந்தால்  புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


அமைச்சர் ஆலோசனை:


தமிழகத்தில் உள்ள 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இந்த பொங்கல் பரிசுதொகுப்பினை, முறையாக வழங்குவது குறித்து, அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.


திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்:


இதையடுத்து, பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 9ம் தேதி சென்னையிலும், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட பொறுப்பு  அமைச்சர்களும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளனர். 9ம் தேதி  தொடங்கி வரும் 13ம் தேதிக்குள் அனைத்து பயனாளர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி முடிக்க தமிழக அரசு தரப்பு திட்டமிட்டுள்ளது.