ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாடு அரசு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்தவகையில் தமிழ்நாடு அரசு பொங்கலுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை இந்தாண்டு 4ஆம் தேதி முதல் தொடங்கப்படும் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 4ஆம் தேதி பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த பொங்கல் பரிசில் 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. இப்பரிசு துணி பையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களுடன் முழுக் கரும்பு ஒன்றும் வழங்கப்பட்டது.
அதன்படி பொங்கல் பரிசில் பச்சரிசி, வெல்லம்,முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு போன்ற 21 பொருட்கள் இடம்பெற்று இருந்தன. அதில் மக்களுக்கு வழங்கப்பட்ட வெல்லம் நன்றாக இல்லை என்று பல்வேறு இடங்களில் இருந்து புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு பொது விநியோக துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
அதன்படி சுமார் 100 டன் அளவிற்கு வாங்கப்பட்ட வெல்லம் சரியாக இல்லாததால் அவை அனைத்தும் வாங்கிய இடத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவைமட்டுமல்லாமல் ஒரு சில இடங்களில் மாவட்ட ஆட்சி தலைவர்கள் ஆய்வு செய்து வழங்கிய அறிக்கையின் படி மிளகு உள்ளிட்ட சில பொருட்களும் திருப்பி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லத்துடன் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டால் அவை 7 நாட்களுக்கு மேல் சரியாக இருக்காது என்று ஒரு சில அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர். இப்படி வழங்கப்படும் வெல்லம் உணவு கலப்படம் குற்றம் செய்பவர்களுக்கு சமம். ஆகவே இந்த நபர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை வழங்கப்பட்டுள்ள பொங்கல் பரிசில் இடம்பெற்றுள்ள பொருட்கள் என்னென்ன?
பச்சரிசி- 1 கிலோ
வெல்லம்- 1கிலோ
முந்திரி- 50 கிராம்
திராட்சை-50 கிராம்
பாசிப்பருப்பு -1/2 கிலோ
நெய்- 100 கிராம்
ஏலக்காய்- 100 கிராம்
மஞ்சள்தூள்-100கிராம்
மிளகாய்தூள்-100 கிராம்
கடலைபருப்பு-1/4கிலோ
மிளகு-50கிராம்
சீரகம்-100கிராம்
கடுகு-100 கிராம்
புளி-200கிராம்
உப்பு-1/2கிலோ
கோதுமாவு-1கிலோ
மல்லிதூள்-100கிராம்
ரவை-1கிலோ
உளுத்தம்பருப்பு-1/2கிலோ
கைப்பை-1
முழுகரும்பு-1
உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை தமிழ்நாடு அரசு இம்முறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பொங்கல் விடுமுறை, கடந்த இரு தினங்களில் ரூ.358 கோடிக்கு மது விற்பனை