அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டசத்து குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் "முதலமைச்சரின் காலை உணவு திட்டம்" எனும் பெயரில் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என சட்டசபையில் கடந்த மே7-ம் அன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை இன்று மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.






முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாத்துரையின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்த முதலமைச்சர் ஸ்டாலின், நெல்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நவீன சமையல் கூடத்தை பார்வையிட்டு, உணவு விநியோகம் செய்வதற்கான வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, கீழ் அண்ணாத்தோப்பு பகுதியில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு ரவா காய்கறி கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் ஆகிய உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து  உணவருந்தி மாணவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.



 

திட்ட துவக்க விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, பெரியகருப்பன், அன்பில் மகேஷ், கீதா ஜீவன், சி.வி.கணேசன், பழனிவேல் தியாகராஜன், எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பங்கேற்றனர். விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கோவை வடிவேலன்பாளையத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 1 ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டியை அழைத்து அவருக்கு பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் கவுரவித்தார். மேலும், 'ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி' எனும் நூலை முதலமைச்சர் வெளியிட கமலாத்தாள் பாட்டி பெற்றுக்கொண்டார்.



 

முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், "வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடிய திட்டம் இது. என் வாழ்வில் பொன்னாள் என சொல்ல தகும் வகையில் இந்த நாள் எனக்கு அமைந்து உள்ளது. பள்ளிக்கு பசியோடு படிக்க வரும் குழந்தைகளுக்கு முதலில் உணவு வழங்கும் வசதியை ஏற்படுத்தி உள்ளோம். தமிழகத்தில் ஒருபுறம் வரலாறு காணாத அளவில் நெல் உற்பத்தி உச்சம் கண்டுள்ளது. மறுபுறம் குழந்தைகள் பசியோடு இருக்க கூடாது எனும் நோக்கில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் சிக்கல்களின் ஆதிமுலத்தை அறிந்து தீர்வு காண வேண்டும் என்ற முயற்சியின் ஒரு பகுதியாக ஆதிமூலம் பள்ளியில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் துவங்கப்படும் ஆதிமூலம் பள்ளி - கீழ் அண்ணாதோப்பில் அமைந்துள்ளது.

அண்ணாவின் பிறந்தநாளில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

என்ன ஒரு பொருத்தம்!

 





102 ஆண்டுகளுக்கு முன்னாள் இதே நாளில் தான் சர்.பி.டி.தியாகராயர் மதிய உணவு திட்டத்தை துவங்கி வைத்தார். ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் இந்த காலை உணவு திட்டம் இன்று துவங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் பள்ளிகளில் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. அது குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர். இன்று குழந்தைகள் காலை உணவு உண்ணும் போது அவர்கள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எத்தகைய நிதி சுமை இருந்தாலும் பசி சுமையை போக்க வேண்டும் என இந்த திட்டத்தை துவங்கி உள்ளோம். ஆயிரம் விளக்கு தொகுதியில் தான் மதிய உணவு திட்டம் துவங்கப்பட்டது. அந்த தொகுதி தான் நான் முதல்முறை சட்டமன்ற உறுப்பினர் ஆனேன் என்பதையும் இப்போது நினைத்து பார்க்கையில் மகிழ்கிறேன்.



இந்த திட்டத்தின் மூலம் தினமும் ஒரு குழந்தைக்கு ரூ.12.75 செலவு செய்யப்பட உள்ளது. உண்மையில் இது செலவு அல்ல அரசின் கடமை. என்னுடைய கடமை. இந்த திட்டம் அனைத்து பள்ளிக்கும் விரைவில் நிறைவேற்றப்படும். இந்த திட்டத்தை இலவசம் என்றோ, சலுகை என்றோ யாரும் நினைக்க கூடாது. இது கடமை.

இந்த திட்டத்தால் பள்ளி செல்லும் மாணவர்களின் கல்வி விகிதம் அதிகரிக்கும். இடைநிற்றல் குறையும். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும்  மாணவர்கள் வாழ்வில் உயர்ந்தால் அது தான் இந்த அரசின் சாதனை கலைஞர் மகனின் அரசு கருணையின் வடிவான அரசு. மாணவ செல்வங்களே உங்களுக்கு காலையும், மதியமும் உணவு வழங்குகிறோம். நீங்கள் எதை பற்றியும் கவலை படாமல் படியுங்கள், படியுங்கள், படியுங்கள்.

கல்வி என்பது நாம் போராடி பெற்ற உரிமை. அதை உங்களது சொத்தாக ஆக்கி கொள்ளுங்கள்.

எந்த காரணம் கொண்டும் கல்வியை விட்டு விலகி செல்லாதீர்கள், விலகி செல்ல நான் விட மாட்டேன்.



தமிழ் சமூகத்தின் வறுமை அகற்றிட எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக உள்ளேன்" என தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழிப்போம் என்று சொன்னவர் MK பாரதி (மகாகவி பாரதி) அதன்படி, காலை உணவு திட்டம் அளித்து பசிப்பிணி நீக்கியவர் முதல்வர் ஸ்டாலின்.

 

 





தமிழகத்தின் ஒவ்வொரு குழந்தைக்கும் இனி இரண்டு தாய். ஒருவர் பெற்ற தாய். இன்னொருவர் முதலமைச்சர் ஸ்டாலின்" என்றார். பள்ளி பார்வையாளர் குறிப்பேட்டில் கையெழுத்திட்ட முதலமைச்சர் அதில், 

"திராவிட மாடல் ஆட்சியாக செயல்படும் நமது ஆட்சியில் இன்று துவங்கியுள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டார்.