கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னுமிடத்தில் இன்று எருதுவிடும் விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. 


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னுமிடத்தில் இன்று எருதுவிடும் விழா நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டதால் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டன..


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக பல்வேறு பகுதிகளில் எருது விடும் விழா நடத்தப்பட்டு வருகிறது இதில் முறையான பாதுகாப்பு இன்றி நடத்தப்படும் எருது விடும் விழாவில் பல உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வந்த நிலையில் இதை சரி செய்யும் நோக்கில் தமிழக அரசு பல விதி முறைகளை அமல் படுத்தியுள்ளது பொதுவாக தமிழகத்தில் பொங்கல் தினத்தை ஒட்டி  ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது உண்டு.


ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு பதிலாக எருது விடும் விழா என்று ஒரு மைதானத்தில் சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடி நூற்றுக்கனக்கான மாடுகளை அழைத்து வரப்பட்டு, கூட்டத்தின் நடுவே காளை மாடுகளை அவிழ்த்து விடுவது வழக்கமாக உள்ளது இதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என பல பேர் உயிரிழப்பதும், காயங்கள் ஏற்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக அரசு காளைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்திலும் பொதுமக்களின் உயிர்பலி தடுக்கும் நோக்கத்திலும் புதிய வழிமுறைகளை பின்பற்றுவதற்காக பல நெறிமுறைகளை வகுத்து அதற்கான முறையான சான்றுகளை சமர்ப்பித்தால் மட்டுமே எருது விடும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் இன்று ஓசூர் அருகே காமன்தொட்டி கிராமத்தில் கோப்பசந்திரம் பகுதில்  நடைபெறவிருந்த எருது விடும் விழா  முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறி, போலிசார் அனைவரையும் விரட்டி வந்தனர். இதனால் கோபமடைந்த மக்கள் கூட்டம், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பண்டிகைக்கு அனுமதி கோரி, கற்களை குவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கூட்டத்தை கலைப்பதற்கு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வருவதுடன், கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசி வந்தனர்.  எருதுவிடும் விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்த பின்பும் இன்னும் போராட்டம் நடைபெற்று வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 15 கி.மீ. தொலைவிற்கு வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன.