பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கவும் பாலிஷ் செய்யவும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த விதிமுறைகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்கானிக் அல்லாத பாஸ்மதி அரிசி ஏற்றுமதி மீதான தடையை நீக்க இந்தியா முடிவு செய்த சில மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. மேலும் இந்த உத்தரவு ப்ரவுன், அரைக்கப்பட்ட பாஸ்மதி என அனைத்துக்கும் பொருந்தும்
இந்த அறிவிப்பின்படி, பாஸ்மதி அரிசியானது அதன் இயற்கையான நறுமணப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும், செயற்கை வண்ணம், பாலிஷ் செய்தல், செயற்கை வாசனை கலவைகள் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் தானியத்தின் சராசரி அளவு, சமைத்த பிறகு அவற்றின் நீள விகிதம் என பாஸ்மதி அரிசிக்கான பல்வேறு அடையாளங்கள், தர அளவீடுகளும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
"பாஸ்மதி அரிசி வர்த்தகத்தில் நியாயமான நடைமுறைகளை நிறுவுவதையும், உள்நாட்டிலும் உலக அளவிலும் நுகர்வோர் நலனைப் பாதுகாப்பதையும் இந்தத் தரநிலைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன" என முன்னதாக அரசு சார்பில் இந்த அறிவிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.