தமிழ்நாட்டில் பொங்கல் விழா கலைக்கட்ட தொடங்கியுள்ளது. அடுத்த வாரம் பொங்கல் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். உலக அளவில் பல்வேறு வகையான அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கையையும் உழவையும் போற்றும் வகையில் அறுவடை திருவிழாவை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.


தமிழர்களின் அறுவடை விழா என்பது கோலாகலமாக நான்கு நாள் நடைபெறும். தமிழ்நாட்டில் அறுவடை திருவிழா, தை மாதத்தில்தான். தை மாதம் முதல் நாள் பொங்கல் விழா. உழவர்கள் தங்கள் உழைத்து அறுவடை செய்த தானியங்களையும், உழவுக்கு உறுதுணையாக இருந்த சூரியனுக்கு நன்றி தெரிவிக்கவும், மண் செழிக்க மழை வேண்டியும் பொங்கலன்று வழிபாடு செய்து மகிழ்ச்சியாக விழா நடைபெறும். பொங்கல விழா கொண்டாட்டத்திற்காக, வீட்டைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளும் மேற்கொள்ளப்படும். 


 போகிப் பண்டிகை - (சனிக்கிழமை /14.01.2023 )


பொங்கலுக்கு முதல் நாளன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘பழையன கழித்து’ புதியனவற்றை வரவேற்க வேண்டும்’ என்பது இதன் நோக்கமாகும். வீட்டில் இருக்கும் பழைய பொருட்கள், உபயோகமற்றவையும் வெளியே வீசி விட்டெரியும் நாளாகக் கருதப்படுகிறது.  போகியன்று, வீட்டைச் சுத்தம் செய்தல், வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை எரிப்பது வழக்கமாக இருக்கிறது. மனதில் இருக்கும் தீய எண்ணங்களை அழித்து நல்லெண்ணத்துடன் வாழ வேண்டும் என்று இந்நாளில் தத்துவமாகும்.  போகியன்று எல்லாவற்றுக்கும் நன்றி கூறும் விதமாக போளி, வடை, பாயசம் உள்ளிட்டவைகள் சமைத்து கடவுளுக்கு படைப்பது வழக்கம். 


பொங்கல் விழா: (ஞாயிறுகிழமை-/ 15.01.2023)


தை மாதத்தின் முதல் நாள் பொங்கல். சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் அன்று, காலையிலேயே எழுந்து கோலமிட்டு புது மண்பானையில், வயலில் இருந்து அறுவடை செய்யப்பட்ட புது அரிசியில் பொங்கல் வைத்து இறைவனை வழிபடுவர். இன்றைய தினத்தில் அனைத்தும் புதிது மட்டுமே பயன்படுத்தப்படும். பானையில் மஞ்சல் கொத்து அணிவர். புதிய மஞ்சள் கொத்து, புதிய கரும்பு ஆகியவற்றை கடவுளுக்குப் படைப்பர். தலை வாழையிலையில், புதுப்பானையில் பால் பொங்கியதும்,  விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.  பொங்கல் பொங்கி வரும் வேளையில் அனைவரும் கூடி நின்று ’பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல்.’ என்று மகிழ்ச்சியுடன் உரக்கச் சொல்வர். பானையில் உள்ள பொங்கலை கதிரவனுக்கு படைத்து, வணங்கி நன்றி தெரிவித்துவிட்டு குடும்பத்தினருடன் அனைவரும் பொங்கல் சாப்பிடுவர்.


மாட்டுப் பொங்கல் : (திங்கள்கிழமை / 16.01.2023)


தை இரண்டாவது நாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவு செழிக்க ஏர் உழுதலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள்தான் இது. மாடுகள் கட்டும் தொழுவம் சுத்தம் செய்யப்படும்; காளை, பசு, எருமை மாடுகளை குளிப்பாட்டி திலகமிட்டு, மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு வண்ணம் பூசப்படும். மாடுகளின் கால்களில் ஜல் ஜல் சலங்கை கட்டு விடுவர். குங்கும், சந்தனம் வைத்து மாடுகள் அலங்கரிக்கப்படும். உழவுக்கருவிகளை சுத்தம் செய்து அதற்கும் பொட்டு வைப்பர். தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும். மாடுகளுக்கும் பொங்கல் கொடுத்து மாடுகளை கொண்டாடும் தினம். 


 காணும் பொங்கல்: (செவ்வாய் கிழமை 17.01.2023)


பொங்கல் விழாவின் நான்காவது நாள் காணும் பொங்கல் என்றழைக்கப்படுகிறது. இதை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களை காணுதல் குடும்பப் பெரியவர்களிடம் ஆசி பெறுதல் ஆகியவைகள் இந்த நாளில் நடைபெறும். உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் இந்தநாளில் நடைபெறும். 


ஹேப்பி பொங்கல் மக்களே! இந்த நாட்களில் அரசு விழுமுறை அளிக்கப்பட்டுள்ளது.