நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு எழுதிய பாதை மாறா பயணம் நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று புத்தகத்தை வெளியிட,  முதல் பிரதியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் இரண்டாவது பிரதியை கவிஞர் வைரமுத்துவும் பெற்று கொண்டனர். 


முதலமைச்சர் பேச்சு:


தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டிற்காக இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைத்தவர் டி.ஆர்.பாலு. 17 வயதில் தீவிர அரசியலில் நுழைந்த பாலு 80 வயதை கடந்தும் ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே தலைமை என கொள்கைப் பிடிப்போடு இப்போதும் இருக்கிறார். அண்ணா கலைக்கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். எனக்கு பேச்சு பயிற்சிக் களமாக அமைந்தது டி.ஆர்.பாலுவின் அண்ணா கலைக்கழகம் தான்.


சிறையில் அதிகரித்த நட்பு:


மிசா காலத்தில் டி.ஆர்.பாலுவுக்கும் எனக்கும் இடையேயான நட்பு இன்னும் நெருக்கமானது. நான் சிறைக்கு சென்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கலைஞருக்கு கார் ஓட்டியதால் பாலு கைது செய்யப்பட்டார். அப்போது, சிறையில் இருந்த இலை, தழைகளை கோர்த்து மாலையாக்கி, பாலுவை சிறைக்கு வரவேற்றோம். நாங்கள் சிறையிலும் ஒன்றாகத் தான் தங்கி இருந்தோம். சிறையில் அண்ணா, கருணாநிதி பிறந்தநாள், முப்பெரும் விழா, பொங்கல் பண்டிகை, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்டவற்றை நடத்தினோம்.


வாடா, போடா”


இன்று நாங்கள் வகிக்கும் பொறுப்புக்காகவே அவர், இவர், என அழைத்துக்கொள்கிறோம். ஆனால், பத்து வயது வித்தியாசம் கொண்ட நாங்கள் இருவரும் ஒரு காலத்தில் வா, போ என அழைத்துக்கொண்டோம். அதையும் தாண்டி வாடா, போடா என்றும் அழைத்துக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமானது எங்கள் நட்பு. பேச்சாளராக செல்லும் போது எனக்கு கிடைக்கும் பணத்தை, எனக்கு துணையாக வரும் பாலுவிற்கு வழங்கிடுவேன். நான் வீட்டில் இருந்ததைவிட டி.ஆர்.பாலு அலுவலகத்தில் இருந்ததுதான் அதிகம். முதன்முறையாக 'இளந்தென்றல்' என்ற பட்டத்தை எனக்கு சூட்டியவர் டி.ஆர்.பாலு.


”பாலு இன்றும் எனக்கு கடன்காரன் தான்”


இந்நேரத்தில் வெளிப்படையாக ஒன்றைக் கூற விரும்புகிறேன். பாலு கோபப்படக் கூடாது. நான் ரூ.5000 கொடுத்து கார் ஒன்று வாங்கினேன். அப்போது ரூ.5,000 பெரிய தொகை தான். அந்த கார் வாங்கி சில நாட்களில் விபத்து ஏற்பட்டது. ரூ.5,000 கார் வாங்கி ரூ.7,000 செலவு செய்தேன். அதனால் காரை விற்று விடலாம் என நினைத்தேன். அந்த காரை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று பாலு சொன்னார். லாபம் வேண்டாம். அசல் மட்டும் போதும் என்று கூறி காரை அவருக்கு விற்றேன்.


ரூ.12,000 கொடுத்தால் போதும் என்று சொன்னேன். அவர் ரூ. 100 அட்வான்ஸ் கொடுத்தார். அவ்வளவு தான் அவர் அதை மறந்துவிட்டார். 2 மாதம் கழித்து மீண்டும் ஒரு ரூ.100 கொடுத்தார். மொத்தம் இதுவரை ரூ. 2000 வரை கொடுத்திருப்பார். ஆகவே இன்றைக்கும் எனக்கு அவர் கடன்காரர் ஆகத்தான் இருக்கிறார் என கூற, அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.


ஸ்டாலின் கோரிக்கை:


27 ஆண்டுகள் எம்பி ஆகவும், 3 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார் பாலு. இவையெல்லாம் டி.ஆர்.பாலுவின் உழைப்பிற்கு கிடைத்த ஊதியம். சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த கருணாநிதி தீவிரம் காட்டினார். சேது சமுத்திர திட்டத்திற்கு நிதி ஒதுக்க உதவியாக இருந்தவர் டி.ஆர். பாலு. ஆனால் இந்த திட்டத்தை பாஜக தடுத்து விட்டது. சேது சமுத்திர திட்டத்தை டி.ஆர். பாலு கையில் எடுக்க வேண்டும்” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.