பொங்கல் பண்டிகை தமிழர்களின் பண்டிகை. ஆனால் இந்தியா முழுவதுமே தை முதல் நாளை வெவ்வேறு பெயர்களில் கொண்டாடி ஆதவனுக்கு நன்றி சொல்கின்றனர். பொங்கல் எப்போதுமே தை முதல் நாளில் தான் கொண்டாடப்படுகிறது. உழவுக்கு உயிரூட்டும் ஆதவனுக்கு நன்றி சொல்லவே பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் பொங்கல் பண்டிகையின் பின்னால் நீண்ட நெடிய வரலாறு இருக்கின்றது.
தமிழ் சூரிய நாட்காட்டியின்படி தை மாதத்தின் முதல் நாளில் தான் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்காக வீடுகள்தோறு சுத்தம் செய்து, புது வர்ணம் பூசி, வீட்டினுள் பச்சரிசி மாவில் கோலங்கள் இட்டு வாயிலில் வண்ணக் கோலங்கள் போட்டு வீடுகளை அலங்கரிப்பார்கள்.
தை தொடங்கி அடுத்த ஆறு மாத காலத்திற்கு சூரியன் வடக்கு நோக்கி நகரும். சூரியனின் தெற்கு இயக்கத்திற்கு மாறான இந்த வடக்கு நோக்கிய பயணம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
சூரியன் மகர ராசியில் நுழைவதை பொங்கல் குறிப்பதால் இந்த மகர ராசி பிரவேசத்தை தமிழ் பேசாதவர்களும் கூட “மகர சங்கராந்தி” என்ற பெயரில் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
சங்க காலம் தொட்டே கொண்டாடப்படும் பொங்கல்:
தையில் இருந்து சூரியன் தெற்கு நோக்கி பயணிப்பது உலகம் உருவான நாள் தொட்ட சம்பவம் என்பதால் பொங்கலின் வரலாற்றை நம் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை சங்க காலம் தொட்டே எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறுகிறார்கள் கலாச்சார ஆய்வாளர்கள். அதன்படி சங்க காலத்தில் பொங்கல் தை நீராடலாக கொண்டாடப்பட்டது எனக் கூறுகின்றனர். தைத் திருநாளை ஒட்டி, திருமணமாகாத பெண்கள்’ நாட்டின் விவசாய செழிப்புக்காக பிரார்த்தனை செய்ததாகவும், அதற்காக அவர்கள் விரதம் கடைபிடித்ததாகவும் நம்பப்படுகிறது.
புராணக் கதையில் இன்னொரு சுவாரஸ்யமும் இருக்கிறது. சிவபெருமான் ஒருமுறை தனது காளையான பசவாவை பூமியில் இறங்கச் செய்திருக்கிறார். அப்போது பசவாவிடம் நீ பூலோக மக்களிடம் அவர்கள் மாதம் ஒருமுறை சாப்பிட்டு அன்றாடம் எண்ணெய் குளியல் மேற்கொள்ளுமாறு சொல்லிவா என்று கூறியுள்ளார்.
ஆனால் பசவா விஷயத்தை அப்படியே மாற்றிக் கூறியுள்ளது. மக்களே நீங்கள் அனைவரும் அன்றாடம் உணவருந்தி மாதம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கச் சொல்லியுள்ளார் சிவ பெருமான் என்று கூறிய்யுள்ளது. இதனை அறிந்த சிவபெருமான் கோபம் கொண்டார். பசவாவிற்கு சாபம் விட்டுள்ளார். பூமியில், பசவா மக்களுக்கு அதிக உணவை உற்பத்தி செய்ய உதவ வேண்டும் என்று பணித்துள்ளார். இதுவே இன்று வரை கால்நடைகள் விவசாயத்துக்கு பயன்படுவதற்கு காரணம் என புராணம் கூறப்படுகிறது.
இதே போல் கிருஷ்ண புராண கதை ஒன்றும் இருக்கிறது. தெய்வங்களுக்கு எல்லாம் ராஜாவான பிறகு கர்வம் கொண்ட இந்திரனுக்கு பாடம் கற்பிக்க கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் முடிவு செய்தார். பசு மேய்ப்பவர்கள் அனைவரையும் இந்திரனை வழிபடுவதை நிறுத்துமாறு கிருஷ்ண பகவான் கட்டளையிட்டார். இதனால் கோபமடைந்த இந்திரன், இடியுடன் கூடிய மழை மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்த தனது பேரழிவு மேகங்களை அனுப்பினார்.
இதையறிந்த பகவான் கிருஷ்ணர் கோவர்தன் மலையைத் தூக்கி, அனைத்து உயிரினங்களுக்கும் தங்குமிடம் அளித்து, இந்திரனுக்கு தனது தெய்வீகத்தன்மையைக் காட்டினார். இதனால் இந்திரனின் பொய்யான அகங்காரம் உடைந்தது என்று அந்த நாள் தைப் பொங்கலாக கொண்டாடப்படுகிறது என்றும் கூறுவர்.
பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான மார்கழியின் கடைசி நாள், போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது மக்கள் தங்கள் பழைய உடைமைகளை அகற்றி புதிய விஷயங்களைக் கொண்டாடும் நாள். இந்நாளில் வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்படுகின்றன. தை முதல் நாள் சூரியப் பொங்கலாகவும் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலாகவும் மூன்றாம் நாள் காணும் பொங்கலாகவும் கொண்டாடுகின்றனர். காணும் பொங்கல் அன்று, மக்கள் தங்கள் சொந்தங்களுடன் ஒன்றுகூடி ஒன்றாக உணவருந்தி கொண்டாடுகிறார்கள்.
இந்த ஆண்டு தைப் பொங்கல் ஜனவரி 15 ஆம் தேதியும், மாட்டுப் பொங்கல் 16 ஆம் தேதியும், காணும் பொங்கல் 17 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் என்பது சங்கத் தமிழனின் தேசியத் திருவிழா, வீசிய விதையின் வேரில் முளைத்த வியர்வைப் பூக்களின் இயற்கைத் திருவிழா.