பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை பெயரை   'க்ராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு' என மாற்றியுள்ளனர். முதல்வர்  விளக்கமளிக்க வேண்டும்! பெரியார் பெயரே நீடிக்குமென அறிவிக்க வேண்டும்! இல்லையேல், இந்த அற்பச் செயலைக் கண்டித்து விசிக அறப்போரில் ஈடுபடும் என எச்சரிக்கிறோம்  என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளன் தெரிவித்தார். 


இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " சென்னையில் ' பூந்தமல்லி நெடுஞ்சாலையை' முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் 1979 இல் " பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை" என பெயர் மாற்றி அறிவித்ததை நாடு அறியும். தற்போது திடுமென அரவமின்றிஅப்பெயரை 'க்ராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு' என மாற்றியுள்ளனர். இந்த செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.   




 


இவ்வாறு திருட்டுத்தனமாய் பெரியார் பெயரை மாற்றியது யார்? அதிமுக அரசு தற்போது அதிகாரம் இல்லாத ஒரு இடைக்கால அரசே ஆகும். எனவே, முதல்வரோ அல்லது அமைச்சரோ இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதலாம். ஆனால், பெயர் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. நெடுஞ்சாலை துறையைச் சார்ந்த அதிகாரிகளே இந்த முடிவை எடுத்தார்களா? சனாதன சிந்தைனையுள்ள அதிகாரிகள் அரசுக்குத் தெரியாமலேயே தன்னிச்சையாக இத்தகைய செயலில் ஈடுபட்டார்களா? அல்லது முதல்வர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கும் இதில் தொடர்பிருக்கிறதா? இதனை முதல்வர் தெளிவுப்படுத்த வேண்டும். 


எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயரைச் சொல்லி ஆட்சியதிகாரத்தை ஐந்தாண்டுகளாக நுகர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இச்செயலுக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அத்துடன், உடனடியாக அப்பெயரை நீக்கி  மீண்டும் பெரியார் பெயரே நீடிக்குமென அறிவிக்க வேண்டும். இல்லையேல், இந்த அற்பச் செயலைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறப்போரில் ஈடுபடும் என எச்சரிக்கிறோம். 


 



தொல். திருமாவளவன் 


 


சனாதனிகளின் கை ஓங்கினால் என்னென்ன கூத்துக்கள் அரங்கேறும் என்பதை இதிலிருந்து ஊகம் செய்யலாம். தமிழ்நாட்டின் பெயரையே 'தக்ஷினபிரதேஷ்' என்று பெயர் மாற்றம் செய்யப்போவதாக பாரதியா ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை இச்சூழலில் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 


பெரியார் அடையாளத்தை முற்றாக அழித்துவிட வேண்டுமென துடிக்கிற தீயசக்திகளையும் அதற்கு துணை போகும் துரோக சக்திகளையும் அடையாளம் கண்டு அவர்களை வெகுமக்களிடையே அம்பலப்படுத்தி அவர்களின் சதிமுயற்சிகளை முறியடிக்க சனநாயக சக்திகள் யாவரும் முன்வரவேண்டுமென விசிக சார்பில் அறைகூவல் விடுக்கிறோம்". 


இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.