சென்னையில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக தினசரி நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,000 க்கும் அதிகமாக உள்ளது.         


சென்னையில், கடந்த ஏப்ரல் 6-12 ஒரு வாரத்தில் மட்டும் 12,240 கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு முன் கடந்த ஆண்டு இரு வாரங்களில் மட்டுமே வார பாதிப்புகள் இதைவிட அதிகமாக கண்டறியப்பட்டது. 


உதாரணாமாக, கடந்த ஆண்டு ஜூன் 23- 29 வார பாதிப்பு எண்ணிக்கை- 12922 ; ஜூன் 3- ஜூலை 6 வார பாதிப்பு எண்ணிக்கை - 13,986 ஆகவும் இருந்தது.  


 



நன்றி - Dr Alby John


 


தமிழகத்தில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 49,985 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 18,673 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதவாவது, 37 சதவீதம் பேர். 


இதன் காரணமாக, சென்னையில் கொரோனா தனிமைப்படுக்கைகள், ஆக்சிஜன் இணைக்கப்பட்ட படுக்கைகள், ஐசியூ படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


குறிப்பாக சென்னை ஓமந்தூர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கொரோனா தனிமைப்படுக்கைகள் நிரம்பி விட்டதாக கூறப்படுகிறது. 


"மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்  கொரோன நோயாளிகளின் விகிதாசாரம் அதிகரித்து வருகிறது. சுமார் மூன்றில் இரண்டு ஆக்சிஜன் நோயாளிகளுக்கு இணைக்கப்பட்ட படுக்கைகள் தேவைப்படுகிறது. ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் மற்றும் குறிப்பிடத்தக்க நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இளைஞர்களுக்கு அதிகமான நுரையீரல் பிரச்சனை ஏற்படும் போக்கை நாங்கள் காண்கிறோம்,”என்று மருத்துவமனை டீன் ஆர்.ஜெயந்தி ஊடகங்களிடம் தெரிவித்தார். 


இதற்கிடையே, சென்னையில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக சென்னை மாநகராட்சி ஆணையம் தெரிவித்தது.


தொடர்ச்சியான பராமரிப்பு அணுகுமுறையை உருவாக்கி, அதன் அடிப்படையில் தீவிரமாக பரிசோதித்தல், தொடர்பு உள்ளவர்களை விரைவாக தடம் அறிதல் மற்றும் பலன் அளிக்கும் வகையில் சிகிச்சை அளித்தல் என்ற வழிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.