சேலம் மாநகரத்தில் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சேலம் மாநகர காவல்துறை கொண்டு வந்துள்ள போலீஸ் அக்கா திட்டம் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் சேலம் மாநகரப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பிற்காக சேலம் மாநகர காவல்துறை சார்பில் "போலீஸ் அக்கா" திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பெண் காவலர் நியமிக்கப்பட்டு அவர்களின் வாயிலாக மாணவியரின் கருத்துக்களை கேட்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, மாநகர துணை காவல் ஆணையர் பிருந்தா, காவல்துறையினர், ஆசிரியர்கள், மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தினை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தொடங்கி வைத்துப் பேசும் போது, "உயர்கல்வியில் சேலம் மாவட்டத்தில் மாணவியர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் போலீஸ் அக்கா திட்டம் நல்ல மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் காவலர்களுக்கு பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிகளுக்கு மாதம் 2 முறை பெண் காவலர்கள் நேரில் சென்று மாணவிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிவார்கள் என்று கூறினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, "சட்டம், மனநலம், மருத்துவம், சமூக நலன் சார்ந்த பிரச்சினைகள் போலீஸ் அக்கா திட்டத்தின் மூலம் ஆரம்ப நிலையிலேயே காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் போலீஸ் அக்கா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாணவிகள் தெரிவிக்கும் பிரச்சினைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்படுவதுடன், அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை ரகசியம் காக்கவும் காவல்துறை உறுதியளித்துள்ளது என்று கூறினார்.
இது குறித்து மாணவிகள் கூறுகையில், "பார்த்தவுடன் அச்சம் ஏற்படுத்துவதாக இல்லாமல், அன்னியோன்யத்துடன் பழகும்போது காவல்துறையினரின் மரியாதை பன்மடங்கு அதிகரிப்பதாக தெரிவித்தனர்.
பலவித ஈர்ப்புகள் நிறைந்த பதின்பருவத்தினரை கையாள்வதற்கு சேலம் மாநகர காவல்துறை எடுத்துள்ள முயற்சி, அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.