தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பார்க்கை திறப்பதற்கு முன்பே டைடல் பார்க் முழுவதும் லீஸ் விடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அதனை விரைவில் திறக்க உள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஹேப்பி நியூஸ் சொன்ன அமைச்சர்:
சென்னையில் ஓ.எம்.ஆர் எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலை தகவல் தொழில்ட்நுட்பத்துறை பெருவழியாக வளர்ச்சியடைவதற்கு 2000ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்த டைடல் பூங்கா முக்கியமானதாகும்.
இதையடுத்து, தமிழகத்தின் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களிலும் டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் என கடந்த 2021ஆம் ஆண்டு, திமுக அரசு பொறுப்பெற்று தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. அதன்படி, முதல் கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்கா உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டடான்-II பகுதியில் 4.16 ஏக்கர் நிலப் பரப்பளவில் 32 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 63,100 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் 4 தளங்கள் கொண்ட மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மினி டைடல் பார்க்கை திறப்பதற்கு முன்பே டைடல் பார்க் முழுவதும் லீஸ் விடப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் டி. ஆர். பி. ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிடுகையில், "தூத்துக்குடிக்கு கிரேட் நியூஸ்.
தூத்துக்குடி மினி டைடல் பார்க்:
தூத்துக்குடியில் நியோ டைடல் பார்க்கை அதிகாரப்பூர்வமாக திறப்பதற்கு முன்பே முழுமையாக குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அலுவலகங்கள் நிரம்பிய மினி டைடல் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் திறக்க உள்ளார்.
திராவிட மாடல் என்பது அனைவருக்குமான வளர்ச்சி என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் விளைவாக, மாநிலம் முழுவதும் திறமை வாய்ந்த மற்றும் மிகுந்த உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டதாகவும் திறமையாளர்களுக்கு வேலைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது. எனவே, இந்தியாவில் திறமையாளர்களின் தலைநகரமாக தமிழ்நாடு உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.