மலர் தூவி மரியாதை செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது '' எஸ் எஸ் ஐ பூமிநாதன் தீவிரவாத தடுப்புப் பயிற்சியில் ஈடுபட்டவர். அவர் முதலமைச்சர் விருதையும் வாங்கியுள்ளார். அவர் விவேகமாக பணியாற்றக் கூடியவர். 15கிமீ துரத்திச் சென்றும் கொலையாளியின் தாயாருக்கு போன் செய்து அறிவுரை கூறியுள்ளார். ரோந்துக்கு செல்லும் போலீசார் கையில் துப்பாக்கி  வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ளோம். தற்பாதுகாப்புக்காக துப்பாக்கியை பயன்படுத்தலாம்'' எனத் தெரிவித்தார்.


நடந்தது என்ன?


நாகை மாவட்டம் தலைஞாயிறை சேர்ந்தவர் பூமிநாதன் (55) சிறப்பு சப் இன்ஸ்பெக்டரான இவர். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். நவல்பட்டு அருகே உள்ள சோழமா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி கவிதா மணி (50), இவர்களுக்கு குகன் (22) , என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அண்ணா பல்கலைகழகத்தில் எம்பிஏ படித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிறு இரவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், நவல்பட்டு தலைமை காவலர் சித்திரைவேலுவும், தனித்தனியே இருசக்கர வாகனங்களில் இரவு ரோந்து பணியில் இருந்துள்ளனர். நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் பூலாங்குடி காலனி பகுதியில் இரண்டு இருசக்கர வாகனத்தில் 4 பேர்கள் வந்தனர். இதில் ஒரு இருசக்கர வாகனத்தில் ஒரு ஆடு இருந்துள்ளது. இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அவர்கள் நின்ற பகுதிக்கு சென்றபோது மர்ம நபர்கள் ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பினர். ஆடு திருடர்களை பிடிக்க வேண்டும் என்ற வேட்கையில் பூமிநாதன் சித்திரைவேலுவும் விரட்டி சென்றனர்.




அப்போது பூலாங்குடி காலனியில் இருந்து திருவெறும்பூர்-கீரனூர் சாலையில் சூரியூர், சின்னபாண்டூரார்பட்டி, லட்சுமணன்பட்டி, பாலாண்டார்பட்டி, வழியாக 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு துரத்தி சென்றபோது அந்த கும்பல் பள்ளத்துப்பட்டி ஊருக்குள் சென்றனர். இதனை பின்தொடர்ந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அவர்களை விரட்டிச் சென்றார் பள்ளத்துப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரும் வழியில் குறுக்கே இருந்த ரயில்வே தரைப் பாலத்தில் மழை நீர் தேங்கி இருந்ததால் அந்த கும்பல் அங்கேயே நின்று விட்டனர். தலைமை காவலர் சித்திரைவேல் வழிதவறி கீரனூர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த கும்பல் 4 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரித்து கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், அந்த தகவலை சித்திரை வேலுவுக்கு செல்போனில் தெரிவித்துள்ளார். இதில் சித்திரைவேலு சம்பவ இடத்திற்கு வர தாமதமானதால் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் நண்பரான காவலர் குளத்தூர் சேகர் என்பவரை பூமிநாதன் தொடர்புகொண்டு நடந்த விவரத்தை தெரிவித்து உடனே சம்பவ இடத்திற்கு வரும்படி தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில் அந்த கும்பல் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூமிநாதன் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயத்துடன் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண