தமிழகத்தில் கடந்த  ஒரு மாதத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருவதால் வரத்து குறைவால் தமிழகம் முழுவதும் இருக்கும் மார்க்கெட் மற்றும் சந்தைகளில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வரத்து குறைந்ததால், தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி, ஒரு கிலோ நாட்டுத் தக்காளியின் விலை 100 ரூபாயாகவும், நவீன தக்காளியின் விலை 120 ஆகவும் விற்பனையானது.



 

அதேபோல் காஞ்சிபுரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாயில் இருந்து 120 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது . அதேபோலச் செங்கல்பட்டு மாவட்டத்தின் தக்காளி விற்பனை நூறு ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. தமிழகம் முழுவதும் தக்காளிகளை மிக வேகமாக உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். பெரிய வெங்காயம் ரூ.40க்கும், கேரட் ரூ.40க்கும், பீன்ஸ், பீட்ரூட் ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதைத்தவிர மற்ற அனைத்து காய்கறிகளும் ரூ.10 முதல் 20 வரை கூடுதலாக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 



பிரியாணியும் தக்காளியும்.

 

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரியாணி கடையில், பண்டமாற்று முறை படி தக்காளிக்கு பதில் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஞானவேல். இவர் சோத்துப்பாக்கம் மேல்மருவத்தூர் வந்தவாசி சாலையில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆம்பூர் பிரியாணி என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் அதற்கு பதில் ஒரு கிலோ பிரியாணி வழங்கப்படும், அதேபோல் இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. 



இதுகுறித்து உணவகத்தின் உரிமையாளர் ஞானவேலிடம் பேசி தொடர்புகொண்டு கேட்டபோது,  பழையபடி பண்டமாற்று முறைதான் விலையேற்றத்திற்கு தீர்வு, அதனை வலியுறுத்துவதற்காக தான் தற்பொழுது இவ்வாறு  வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

இணையதளத்தில் வைரல் தக்காளி

 

ஒவ்வொரு முறையும் வெங்காயம் மற்றும் தக்காளி விலை ஏறும்போது மீம்ஸ்கள் மூலம் நெட்டிசன்கள் தெறிக்க விடுவார்கள். அதே போல இம்முறையும் தக்காளி குறித்த மீம்ஸ்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது. "பெட்ரோல் விலையை தாண்டி தக்காளி விலை விற்று வருகிறது" . தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என கூகுளில் தேடுவது போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.